

ஆக்ராவில் சட்டவிரோதமாக வசித்து வந்த எட்டு குழந்தைகள் உள்பட 38 வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், சிக்கந்தரா பகுதியில் 38 வங்க தேசத்தினர் சட்டவிரோதமாக வசித்து வந்தது கடந்த 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் யாரிடமும் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.
சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக 38 பேரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 38 பேரில் 23 ஆண்கள், ஏழு பெண்கள் மற்றும் எட்டு குழந்தைகள் அடங்குவர்.
ஆண்களும் பெண்களும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இன்றுடன் அவர்களின் சிறை தண்டனை முடிந்த நிலையில் 38 பேரும் நாடு கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
வாகனங்கள் மூலம் அவர்கள் வங்கதேச எல்லைக்கு அனுப்பப்பட்டனர். ஜனவரி 13 ஆம் தேதி அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று உதவி காவல் ஆணையர் தினேஷ் சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.