

மத்திய அரசின் நிதி நெருக்கடிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் ஜன. 12ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய மற்றும் நிலுவையில் உள்ள தொகைகளை விடுவிக்கக்கோரி ஒரு நாள் சத்தியாகிரகப் போராட்டத்தில் திரளானோர் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளதாவது:
''திருவனந்தபுரத்தில் ஜனவரி 12ஆம் தேதி புதிய எதிர்ப்பு முன்னணியை கேரளம் தொடங்க இருக்கிறது. மத்திய அரசால் கொடுக்கப்படும் நிதி நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் சத்தியாகிரகம் நடைபெறவுள்ளது. மாநிலத்தின் எதிர்ப்பை குறிக்கும் வகையில், இதில், திரளான மக்கள் பங்கேற்கவுள்ளனர்'' எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு இருட்டடிப்பு செய்துள்ள திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார்.
''நடப்பு நிதியாண்டின் கடைசி மூன்று மாதங்களுக்கான (ஜனவரி-மார்ச்) மாநிலத்தின் தகுதியான கடன் வரம்பிலிருந்து ரூ. 5,900 கோடியைக் குறைத்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் மொத்த கடன் வரம்புக் குறைப்பு ரூ. 17,000 கோடி ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை நிலம் கையகப்படுத்துதலுக்காக மாநில அரசு செய்த செலவுகளுக்கு இழப்பீடாகக் கூடுதலாக ரூ. 6,000 கோடி கடன் கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.
ரூ. 965 கோடி மதிப்புள்ள ஐஜிஎஸ்டி வரி வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரவாத வைப்புத்தொகைகளின் அடிப்படையில் ரூ. 3,300 கோடி கடன் பெறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டங்களுக்கான மொத்த நிலுவைத் தொகை ரூ.5,784 கோடியாக உள்ளது'' என பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.