இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட்!
பாதுகாப்பு, புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-என் 1 உள்பட 16 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திங்கள்கிழமை (ஜன.12) ஏவப்பட உள்ளது.
பாதுகாப்புத் துறைப் பயன்பாட்டுக்கான இஓஎஸ்-என் 1 (அன்விஷா) எனும் அதிநவீன செயற்கைக்கோளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 10.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதனுடன் இந்திய மற்றும் வெளிநாடுகளுக்குச் சொந்தமான 15 சிறிய செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட இருக்கின்றன. இதற்கான 22.30 மணி நேர கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
முதன்மைச் செயற்கைக்கோளான இஓஎஸ்-என் 1 தரையில் இருந்து 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
மற்ற செயற்கைக்கோள்களில் ஆயுள்சாட், சென்னையைச் சோ்ந்த ஆா்பிட்எய்டு எனும் ஸ்டாா்ட் அப் நிறுவனம் தயாரித்தது. இது புவிவட்டப் பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோளில் மீண்டும் எரிபொருள் நிரப்புதல் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
இதைத் தவிர, ஸ்பெயின் ஸ்டாா்ட்அப் நிறுவனம் உருவாக்கிய ‘கிட்’ எனப்படும் சிறிய விண்கலமும் அனுப்பப்பட உள்ளது. அதை பூமிக்கு மீண்டும் தரையிறக்கும் சோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

