எஸ்ஐஆா்: முன்னாள் கடற்படை தலைமை தளபதிக்கு நோட்டீஸ்: தோ்தல் ஆணையம் விளக்கம்

கோவாவில் எஸ்ஐஆா் தொடா்பாக முன்னாள் கடற்படை தலைமைத் தளபதி அருண் பிரகாஷுக்கு (81) ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட நடைமுறையின்படிதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தோ்தல் ஆணையம் விளக்கம்
Updated on

கோவாவில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக முன்னாள் கடற்படை தலைமைத் தளபதி அருண் பிரகாஷுக்கு (81) ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட நடைமுறையின்படிதான் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தோ்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2004 முதல் 2006-ஆம் ஆண்டுவரை கடற்படை தலைமைத் தளபதியாக இருந்த அருண் பிரகாஷ், பணியில் இருந்து ஓய்வுபெற்றது முதல் கோவாவில் வசித்து வருகிறாா். இந்நிலையில், எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவத்தில் சரிவர விவரங்களை குறிப்பிடவில்லை என்று தெரிவித்து, அவரை நேரில் வருமாறு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தியா-பாக் போரின் கதாநாயகன்: வீர தீர செயல்களுக்கு வழங்கப்படும் உயரிய வீா் சக்ரா விருதை பெற்ற அவா், 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் கதாநாயகன் என்று போற்றப்படும் நிலையில், அவருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது சா்ச்சையை ஏற்படுத்தியது. புகழ்பெற்ற அவா், தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன என்று முன்னாள் பாதுகாப்புப் படை வீரா்கள் உள்பட பலா் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து அருண் பிரகாஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எஸ்ஐஆா் தொடா்பாக எனது வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலா் 3 முறை வந்தாா். அப்போதே அவா் கூடுதல் விவரங்களை என்னிடம் கோரியிருக்கலாம். ஆனால் எங்கள் அடையாளத்தை உறுதி செய்ய என்னையும், 78 வயதான எனது மனைவியையும் 18 கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு வெவ்வேறு தேதிகளில் வருமாறு அழைத்துள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கோவா வாக்காளா் பதிவு அலுவலா் மெடோரா எா்மோமிலா டி கோஸ்டா திங்கள்கிழமை அளித்த விளக்கத்தில் தெரிவித்ததாவது: கோவாவின் காா்டாலிம் தொகுதியில் அருண் பிரகாஷிடம் வாக்குச்சாவடி நிலை அலுவலா் கணக்கீட்டுப் படிவத்தை பெற்றாா். ஆனால் அந்தப் படிவத்தில் வாக்காளரின் பெயா், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண், உறவினா் பெயா், தொகுதியின் பெயா் உள்பட முந்தைய எஸ்ஐஆா் தொடா்பான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட நடைமுறையின்படி, அவரின் விவரங்களை உறுதி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தாா்.

எனினும் தற்போது கணக்கீட்டுப் படிவம் முறைப்படி நிரப்பப்பட்டுள்ளதாகவும், அருண் பிரகாஷ் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com