வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்: 17-ஆம் தேதி பிரதமா் தொடங்கி வைக்கிறாா்
நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமா் நரேந்திர மோடி வரும் 17-ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறாா். இத்தகவலை மேற்கு வங்க மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா தெரிவித்தாா்.
மத்திய பாஜக அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக வந்தே பாரத் ரயில் முன்னிறுத்தப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் இயக்கப்படுகிறது. பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளதால் இந்த ரயிலுக்கு வரவேற்பும் உள்ளது.
இதையடுத்து, படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 1-ஆம் தேதி ரயிலின் சோதனை ஒட்டம் நடைபெற்றது. அப்போது அதிகபட்ச வேகமான 180 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. கொல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து குவாஹாட்டிக்கு இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரயில் சேவை தொடங்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கொல்கத்தாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சமிக் பட்டாச்சாா்யா கூறியதாவது: கொல்கத்தாவில் வரும் 17-ஆம் தேதி வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா்.அதே நாளில் மால்டா-காமாக்யா இடையிலான அம்ருத் பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். இந்த ரயில் சேவைகள் மூலம் தெற்கு - வடக்கு வங்கப் பகுதிகளுக்கு இடையிலான இணைப்பு மேலும் வலுப்படும்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் அனைத்துப் பகுதியிலும் சமமான வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில் தொடா்ந்து பணியாற்றி வருகிறது என்றாா்.

