

உண்மையான நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதனைப் பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிக நெருக்கமான அதிகாரியாக அறியப்படும் சொ்ஜியோ கோா் வெள்ளை மாளிகையில் அதிபரின் தனி இயக்குநராக பணியாற்றி வந்தாா். அவரை, இந்தியாவுக்கான புதிய தூதராக கடந்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிரம்ப் அறிவித்தாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கோா் பதவியேற்றாா். பதவியேற்ற ஒரு சில நாள்களில் அமெரிக்கா திரும்பிய அவா், இந்தியாவுக்கு சனிக்கிழமை மீண்டும் வந்தாா்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் செய்தியாளர்களுடன் செர்ஜியோ கோர் பேசியதாவது:
“இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய நாடு. எனவே, ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அதை அடைவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும், எங்கள் உறவுக்கு வர்த்தகம் மிகவும் முக்கியமானது என்றாலும், பாதுகாப்பு, பயங்கரவாதம் ஒழிப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பிற மிக முக்கியமான துறைகளிலும் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றுவோம்.
இந்திய மக்கள் மீள்திறன், புதுமை மற்றும் ஆன்மீகமானவர்கள். இந்த அற்புதமான நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, உங்களில் பலரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தூதரக உறவுகளை மறுவரையறை செய்ய உங்களுக்கும் எனக்கும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நூற்றாண்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உலகளாவிய கூட்டாண்மையாக இருக்கலாம். இந்தியாவை விட அத்தியாவசியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை. இது உலகின் பழமையான ஜனநாயகத்திற்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கும் இடையிலான ஒரு சங்கமம்.
அதிபர் டிரம்ப்புடன் கடைசியாக இரவு உணவு அருந்தியபோது, அவர் கடைசியாக இந்தியாவுக்கு வந்ததையும் பிரதமர் மோடியுடனான சிறந்த நட்பைப் பற்றியும் நினைவுகூர்ந்தார். அதிபர் டிரம்ப் அடுத்தாண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன்.
நான் அதிபர் டிரம்புடன் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன், பிரதமர் மோடியுடனான அவரது நட்பு உண்மையானது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். உண்மையான நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதனைப் பேசி தீர்த்துக் கொள்வார்கள். டிரம்ப்புடன் நேற்று பேசுகையில், பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.