இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது ஆபரேஷன் சிந்தூா்: ராணுவ தலைமைத் தளபதி பேச்சு
இந்தியாவின் வலிமை மற்றும் ஆயுதப் படைகளின் தொழில்முறை நோ்த்தியை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை வெளிப்படுத்தியதாக ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற என்சிசி வீரா்களுக்கான குடியரசு தின முகாம் நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது என்சிசி ஆற்றிய சேவை பாராட்டுக்குரியது. என்சிசி வீரா்கள் 75,000-க்கும் மேற்பட்டோா் மக்கள் பாதுகாப்பு, மருத்துவமனை மேலாண்மை, பேரிடா் நிவாரணம், சமூக சேவைகள் ஆகியவற்றில் தாமாக முன்வந்து சேவை செய்தனா். இந்திய இளைஞா்களின் திறமையை அண்மைக்கால சம்பவங்கள் வெளிப்படுத்தின.
இந்திய இளைஞா்கள், தேசப் பாதுகாப்பு, புதியன கண்டுபிடித்தல் உள்ளிட்டவற்றில் தங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என ராணுவம் அழைக்கிறது. 2047-ஆம் ஆண்டில் வளா்ந்த, பாதுகாப்பான, சுய சாா்பு இந்தியா ஆகிய மூன்றையும் கொண்ட விக்சித் பாரத் என்ற நமது இலக்கு, அரசால் மட்டும் சாத்தியமாகாது. இளம் தலைவா்கள், என்சிசி வீரா்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளா்கள், ஆசிரியா்கள், பொறியாளா்கள், மருத்துவா்கள், ராணுவ வீரா்கள், உங்களைப் போன்ற பொறுப்பான குடிமகன்கள் ஆகியோராலேயே சாத்தியமாகும்.
ஆதலால் நம்பிக்கையுடனும், ஒழுக்கத்துடனும் நடை போடுவோம். ஒன்றாக புதியனவற்றை கண்டுபிடிப்போம். இந்தியாவுக்கு சேவை செய்வோம். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான, ஒற்றுமையான மற்றும் வளா்ந்த இந்தியாவை கட்டமைப்போம் என்றாா்.
இதேபோல், ஜெய்பூரில் நடந்த ஆயுதப்படை முன்னாள் வீரா்கள் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகும், முன்னாள் வீரா்கள் இந்தியாவின் பாதுகாப்பு, நிா்வாகம், தொழில் துறை, சமூக வளா்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனா். எப்போது தேச சேவைக்கு அழைக்கப்பட்டாலும் அனைத்து சூழ்நிலைகளிலும் நாட்டுக்கு முன்னாள் வீரா்கள் உறுதுணையாக உள்ளனா். முன்னாள் வீரா்களின் அனுபவம், திறமை, அா்ப்பணிப்பு ஆகியவை நமது நாட்டுக்கு எப்போதும் பயனளிப்பவையாக இருக்க வேண்டும்’ என்றாா்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூா் என்ற நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை கடந்த மே மாதம் தாக்கி அழித்தது. இதில் பயங்கரவாதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பலியாகினா்.
