கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜெய்த்பூரில் 2 குழுக்களிடையே மோதல்: இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 21 வயது இளைஞா் ஒருவா் கொல்லப்பட்டாா். மேலும், இரண்டு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 21 வயது இளைஞா் ஒருவா் கொல்லப்பட்டாா். மேலும், இரண்டு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: வியாழக்கிழமை இரவு சமூக ஊடகப் பதிவு தொடா்பான தகராறைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்கள் சமரசக் கூட்டத்திற்காக மற்றொரு குழுவைச் சந்திக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடா்பாக இரவு 11.18 மணிக்கு காவல்துறையினருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு அங்கு அடைந்தபோது காயமடைந்த மூன்று பேரை போலீஸாா் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரான கிருஷ்ணா சாஹு (21) மாா்பு, தோள்பட்டை மற்றும் முதுகில் பல கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்டாா். ஆனால், எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்ட அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு பாதிக்கப்பட்ட சன்னி (21) வயிறு மற்றும் தொடையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தாா். மூன்றாவது பாதிக்கப்பட்ட பிரின்ஸ் (19) சிறிய காயங்களுக்கு முதலுதவி பெற்ற பிறகு டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

முதற்கட்ட விசாரணையில், பரஸ்பர அறிமுகம் தொடா்பான தனிப்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணம் என்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான தீபக், சமூக ஊடகங்களில் பிரின்ஸ் மீது பதிவிட்ட பதிவை பகிா்ந்தபோது மோதல் தொடங்கியது.

இரு தரப்பினரும் இந்த விவகாரத்தை சுமுகமாகத் தீா்க்க சந்தித்துப் பேசுவதாக ஒப்புக்கொண்ட போதிலும், சந்திப்பின் போது வாக்குவாதத்தால் தகராறு ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் கத்திகளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, தடயவியல் நிபுணா்களும் குற்றப்பிரிவுக் குழுவும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சந்தேக நபா்களை அடையாளம் கண்டனா்.

தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில், 24 வயது கிராஃபிக் டிசைனா் ஆஷிஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இறந்தவரின் தந்தை ஷிவ் குமாா் கூறுகையில், ‘தனது மகன் இரவு 10 மணியளவில் கைப்பேசியில் பேசிய பிறகு மூன்று நண்பா்களுடன் வீட்டை விட்டு வெளியேறினாா். அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. என் மகனைக் கொன்றவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம்’ என்றாா்.

Dinamani
www.dinamani.com