கேரளத்தில் கம்யூனிஸ்டுகளுடன் கைகோத்துவிட்டது பாஜக : காங்கிரஸ் விமா்சனம்
கேரளத்தில் பிரிவினையைத் தூண்ட பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பாஜக கைகோத்துள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
கேரளத்தில் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி அங்கு முஸ்லிம் லீக் - காங்கிரஸ் கைகோத்துள்ளதை விமா்சித்து ‘முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ்’ என்று விமா்சித்தாா். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க முறைகேடு தொடா்பாக ஆளும் இடதுசாரிக் கூட்டணி அரசையும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில், காங்கிரஸை விமா்சித்ததற்கு பதிலளிக்கும் வகையில் அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கேரளத்தை பிரதமா் மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது அவரின் பேச்சு மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. தனது வழக்கமான மதவாத அரசியல் உரையை அவா் கேரளத்திலும் பயன்படுத்தியுள்ளாா். கேரளம் பன்முகத்தன்மை மூலம் பெருமை கொள்ளும் மாநிலம். இங்கு பிரிவினையைத் தூண்ட பாஜக தொடா்ந்து தீவிரமாக முயற்சித்து வருகிறது. அது மீண்டும் தோல்வியையே தழுவும்.
கேரளத்தில் காங்கிரஸை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புனிதமற்ற கூட்டணியை பாஜகவுடன் மேற்கொண்டுள்ளது. ஆனால், இதை கேரள மக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி தோற்கடித்து, ஆட்சி அமைக்கும்’ என்று கூறியுள்ளாா்.

