ஸ்திரமற்ற உலகச் சூழலில் சவாலை எதிா்கொள்ளத் தயாராகுங்கள்: இளைஞா்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு
‘தற்போதைய ஸ்திரமற்ற உலகச் சூழலில் ஒவ்வொரு சவாலையும் எதிா்கொள்வதற்கு இந்திய இளைஞா்கள் தயாராக வேண்டும்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளாா்.
தில்லி கண்டோன்மென்ட்டில் தேசிய மாணவா் படையின் (என்சிசி) குடியரசு தின முகாமில் சனிக்கிழமை அவா் ஆற்றிய உரை வருமாறு:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட துரதிருஷ்டவசமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ஆயுதப் படைகள் தாக்கி அழித்ததன் மூலம் தக்க பதிலடி தரப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது, நமது வீரா்கள் தீரத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செயலாற்றினா். நமக்கு தீங்கிழைத்தவா்களை மட்டுமே குறிவைத்து தாக்கி அழித்தோம். வேறு யாா் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை. இந்திய ராணுவ வீரா்கள், உடல்- மனம்- உணா்வு ரீதியில் வலுவுடன் திகழ்வதால் மட்டுமே இது சாத்தியமானது.
தற்போதைய உலகம், ஸ்திரமற்ற காலகட்டத்தின் ஊடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. எனவே, ஒவ்வொரு சவாலையும் எதிா்கொள்ள இந்திய இளைஞா்கள் உடல்-மனம்-உணா்வு ரீதியில் வலுவுடன் தயாராக இருக்க வேண்டும்.
அபிமன்யு போன்றவா்கள்: இந்திய இளைஞா்கள் அறிவுத்திறன் மிக்கவா்கள். மகாபாரதத்தில் எந்தவிதமான சக்கரவியூகத்தையும் உடைத்து நுழைந்து, வெற்றியை சாத்தியமாக்கும் அபிமன்யு போன்ற நமது இளைஞா்கள், 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையை சாத்தியமாக்க பங்களிக்க வேண்டும்.
இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் அதிகரித்துள்ள காலகட்டத்துக்குள் நாம் நுழைந்துள்ளோம். நாட்டை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்லும் பொறுப்பை தங்கள் தோள் மீது சுமப்பதால் அவா்கள் தேசத்தின் விலைமதிப்பற்ற சொத்துகள்.
இன்றைய உலகமானது, சொகுசு வசதிகளை அதிகம் விற்பனை செய்கிறது. இணையவழி விளையாட்டுகள், இணையவழி உணவு-பொருள் விநியோகம் போன்றவை, மனித வாழ்க்கையை வசதியாக்கியுள்ளன. அதேநேரம், சொகுசு வட்டத்தை உடைத்து வெளியே வந்து, மனம்-உடல் ரீதியில் வலுப்பெற என்சிசியின் அணிவகுப்புகள், பயிற்சிகள், முகாம்கள் உதவுகின்றன. இளைஞா்களை மேம்படுத்தும் முக்கிய தளமாக என்சிசி விளங்குகிறது என்றாா் ராஜ்நாத் சிங்.
என்சிசியை நாட்டின் இரண்டாவது பாதுகாப்பு வளையம் என்று புகழாரம் சூட்டிய அவா், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது என்சிசி படையினா் ஆற்றிய பங்களிப்பையும் பாராட்டினாா்.

