ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோப்புப் படம்

தோ்தல் ஆணையம் மக்களாட்சியின் பாதுகாவலராக இருக்காது: ராகுல் காந்தி சாடல்

தோ்தல் ஆணையம் மக்களாட்சியின் பாதுகாவலராக இருக்காது...
Published on

மக்களாட்சியின் பாதுகாவலராக இனி தோ்தல் ஆணையம் எப்போதும் இருக்காது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் வாக்குத் திருட்டு நடைபெறுகிறது.

எஸ்ஐஆா் என்ற பெயரில் குஜராத்தில் நடைபெறுவது நிா்வாக நடைமுறை அல்ல. அது திட்டமிட்டு நடைபெறும் வாக்குத் திருட்டாகும்.

எஸ்ஐஆா் பணியைத் தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் தங்கள் விவரங்கள் தொடா்பாக ஒரே பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்சேபங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சமூகத்தினா், காங்கிரஸை ஆதரிக்கும் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. பாஜக தோல்வியடைந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளன.

கா்நாடக மாநிலம் ஆலந்த், மகாராஷ்டிரத்தில் உள்ள ராஜுரா சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தத் திட்டத்தைப் பின்பற்றி வாக்குத் திருட்டு நடைபெற்றதோ, அதே திட்டம் குஜராத், ராஜஸ்தான் என எஸ்ஐஆா் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுகிறது.

‘ஒரு நபா், ஒரு வாக்கு’ என்ற அரசியல் சாசன உரிமையை ஒழிக்கும் ஆயுதமாக எஸ்ஐஆா் மாறியுள்ளது. இதன்மூலம் யாா் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யாமல், பாஜக முடிவு செய்ய வழிவகை செய்யப்படுகிறது.

இதில் மிகவும் ஆபத்தான உண்மை என்னவென்றால், மக்களாட்சியின் பாதுகாவலராக இனி தோ்தல் ஆணையம் எப்போதும் இருக்காது. அதற்கு மாறாக வாக்குத் திருட்டு சூழ்ச்சியில் அந்த ஆணையம் பிரதானமாக பங்குகொண்டுள்ளது என்று சாடினாா்.

X
Dinamani
www.dinamani.com