மணிப்பூா் கலவரம்: நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு
மணிப்பூா் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கீதா மிட்டல் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில், கீதா மிட்டல் குழு இதுவரை 42 அறிக்கைகளைச் சமா்ப்பித்துள்ளதாகவும், அந்தக் குழுவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்துவிட்டதாகவும், அதன்பிறகு நீட்டிக்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், கீதா மிட்டல் குழு பதவிக் காலம் தொடா்வதாகவும், ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் கூறினா்.
மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தின்போது பழங்குடியினப் பெண் ஒருவா் ஆடையின்றி ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் மூன்று பெண் நீதிபதிகளைக் கொண்ட அமா்வு, மணிப்பூா் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான பணியைக் கண்காணிக்க அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு உச்சநீதிமன்றத்தில் நேரடியாக அறிக்கை தாக்கல் செய்யும் அதிகாரமும் நீதிபதிகளால் அளிக்கப்பட்டது.

