

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இன்று (ஜன. 30) நடைபெற்ற விழாவில், 12 பெண் சாதனையாளர்கள், தேவி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், 37-வது தேவி விருதுகள் விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டிராக்டர் மற்றும் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குர் மல்லிகா சீனிவாசன் கலந்துகொண்டு, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன், ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.
பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கிய மல்லிகா சீனிவாசன் உரையாடலின்போது தெரிவித்ததாவது:
ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும், நிச்சயம் சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். முதலில் சவால்களை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வழக்கமான பணிகளிலிருந்து வேறுபட்டு, லட்சியத்தை அடைய வேண்டும் என்றால் சவாலை எதிர்கொள்வதே ஒரே வழி.
தொடர்ந்து பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துத் தெரிவித்த அவர், நிச்சயம் அது மிகவும் கடினம்தான். முதலில் நிதர்சனத்தை ஏற்க வேண்டும். இது இப்படித்தான்.
இது இப்படித்தான் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்வை அதன் போக்கில் கொண்டு செல்ல வேண்டும். லட்சியத்தை மட்டும் கருத்தில் கொண்டு, தெளிவான சிந்தனையுடன் அதனை நோக்கி உங்களை செலுத்திக் கொள்ளுங்கள்.
எங்களுடைய தொழிற்சாலையில் மாற்றுத்திறனாளி பெண்கள் அதிகம் வேலை பார்க்கின்றனர். அவர்கள்தான் உபகரணங்களை உலக தரத்தில் தயாரிக்கின்றனர். கரோனா காலத்திலும் வேலை செய்தார்கள். அவர்கள் எங்கள் தொழிற்சாலையில் குறைவான விடுப்பு எடுக்கும் நபர்களாகவும் இருக்கின்றனர் என்று கூறினார்.
விருது பெற்றவர்கள்
நாடகக் கலை பயிற்சியாளர் ஆயிஷா ராவ், அருங்காட்சியகக் கலை நிபுணர் டெபோரா தியாகராஜன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன், மனநல மருத்துவர் தாரா சீனிவாசன், பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும், நடிகையும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம், அரசு செவிலியர் ஜி. சாந்தி, ஆட்டோ ஓட்டுநர் மோகன சுந்தரி, மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி நாராயணன், ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா, கல்வியாளர் - சமூக ஆர்வலர் மேரி சூசன்னா டர்காட் ஆகியோருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயஸ்ரீ வெங்கடேசனுக்காக அவரது மகள் அஞ்சனா விருதைப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.