

சுற்றுலா என்றாலே வியட்நாம், சிங்கப்பூர் என்றில்லாமல் உள்நாட்டில் பல விஷயங்கள் உள்ளன, மக்கள் அனுபவச் சுற்றுலாவை நோக்கி நகர வேண்டும் என்று சுற்றுலா பதிவர் கார்த்திக் முரளி கூறினார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த கருத்தரங்கில், "சென்னையின் மென்மையான சக்தி: கலை, இசை, உணவு, இன்னும் பல” என்ற தலைப்பில் சுற்றுலா பதிவர் - தரவுகள் மேலாண்மையாளர் கார்த்திக் முரளி, பாடகி காவ்யா அஜித், சுற்றுலா நிர்வாகி நைனா ஷா, எழுத்தாளர் லிலியம் மரியானா ஆகியோர் கலந்துரையாடினார்கள்.
இந்த கலந்துரையாடலில் உரையைத் தொடங்கிய கார்த்தி முரளி, உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டுக்கு வந்து, கள நிலவரத்தைப் பார்த்து சுற்றுலாவை மேம்படுத்த அழைக்கிறார்கள். இலங்கையிலிருந்தும் இப்படி ஒரு அழைப்பு வந்தது. சென்னை, மும்பையில் உட்கார்ந்துகொண்டு அங்கே அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என எழுதாமல், இங்கே வந்து எப்படி இருக்கிறது என்று பார்த்து அதனை மக்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள். இதுதான் சுற்றுலாவின் இலக்கு.
இந்த வகையில் மூன்று சுற்றுலா தரவுகளை நாங்கள் எடுத்தோம், உள்நாட்டிலிருந்து வெளிநாடு செல்வோர், வெளிநாட்டிலிருந்து நம் நாட்டுக்கு சுற்றுலா வருவோர், நம் நாட்டு மக்கள், நாட்டுக்குள் சுற்றுலா செல்வது என மூன்று தரவுகள் உள்ளன.
இப்போதெல்லாம் சுற்றுலா ஏஜெண்டுகள் உள்நாட்டு சுற்றுலாவை கைவிட்டுவிட்டார்கள். நேராக வியட்நாம், சிங்கப்பூர் என அழைத்துச் சென்றால் நல்ல வருவாய் வருகிறது. ஐந்து உள்நாட்டுச் சுற்றுலா அழைத்துச் சென்றால்தான் அந்த வருவாய் கிடைக்கும். பிறகு ஏன் உள்நாட்டுச் சுற்றுலாவை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
நம் நாட்டில், பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும் என்று நிர்பந்தத்துடன் வெளியே கிளம்புகிறார்கள். அப்போது ஒருவர் சுற்றுலா ஏஜெண்டிடம் போனால், ராமாயணத்துடன் தொடர்புடைய இலங்கையைப் பார்க்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவிலேயே அயோத்தி இருக்கிறது. அதனைப் பார்க்க சொல்ல மாட்டார்கள்.
எனவே, வெறும் சுற்றுலா என்று நினைக்காமல், அனுபவச் சுற்றுலாவை இலக்காகக் கொண்டு பயணத்தைத் தொடங்க வேண்டும். அதில் பல விஷயங்களை பார்க்க முடியும். அனைவரும் செல்லும் ஒரே இடத்தில் சென்று குவிவதில் இல்லை சுற்றுலா, அனுபவச் சுற்றுலாவை நோக்கி மக்கள் நகர வேண்டும் என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பாடகி காவ்யா அஜித், பல்வேறு கலாசாரம், மொழிகள், பண்பாடுகளை ஓங்கி ஒலிக்கும் கருவியாகவும் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் பாடல்கள் உள்ளன. அதுவும் குறிப்பாக மக்கள் நேரடியாக பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள் என்று சொன்னால், அதில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். பாடல் என்று சொன்னாலே, அது மனதையும் உடலையும் குணமாக்குகிறது, மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என சொல்லலாம்.
கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டிலும் மக்கள் நேரடியாகப் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மக்கள் முன்னிலையில் பாடும்போது எவ்வாறு உணர்வீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், இசை ரசிகர்கள் முன்னிலையில் பாடும்போது அது மிகப்பெரிய அனுபவமாக இருக்கும். அவர்கள் வெறுமனே இசையைக் கேட்பதில்லை, அதனை உணர்வதற்காகவே அங்கு வருகிறார்கள்.
அதிலும், ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால் டிக்கெட் புக்கிங், எங்கே நடக்கிறது, எப்போது என்பது குறித்து அறிந்து டிக்கெட் முன்பதிவு செய்து, உங்களுக்கான இடத்தை அடைந்து, பாடலைக் கேட்பது பிறகு நிம்மதியாக வீட்டை அடைவது என்பதில் பல சிரமங்கள் இருந்தாலும், அத்தனையும் தாண்டி நேரில் வந்து பாடல்களைக் கேட்க வேண்டும் என்று வருகிறார்கள் என்றால் அது எப்படிப்பட்டது என்று புரியும்.
அங்கிருக்கும் ஒவ்வொரு ரசிகர்களும் அனைத்துப் பாடல்களையும் ஒவ்வொரு வார்த்தையையும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடுவார்கள். அதனைப் பார்க்க முடியும். அதனை அனுபவப் பூர்வமாக உணர முடியும் என்றார்.
எழுத்தாளர் லிலியம் மரியானா பேசுகையில், தான் 8 உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்றிருப்பதாகவும், கியூபா, ஆர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளை பார்த்திருப்பதாகவும் கூறினார். கியூபாவில் ஒரு வழக்கு மொழி உண்டு, முதலில் கியூபாவை சுற்றிப் பாருங்கள். பிறகு வெளிநாடு செல்லலாம். இதனை அடிப்படையாக வைத்து முதலில் கியூபாவை முழுமையாக சுற்றிப் பார்த்தோம். அப்போதுதான் அதன் பல்வேறு பழமையான விவரங்களை அறிந்துகொண்டோம். தற்போது சென்னை வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. வெளிநாடுகளில் இந்தியா பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அங்கிருப்பவர்கள் என்னைத் தொடர்புகொண்டு கேட்பார்கள். நான் அவர்களிடம் சொல்லுவேன், இந்தியாவுக்கு நிச்சயம் வந்து பாருங்கள், பாதுகாப்பானது என்று அவர்களை இந்தியாவுக்கு அழைப்பேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் கோ-ஆப்டெக்ஸில் வாங்கிய புடவை அணிந்துள்ளேன். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளைவிட ஆரணி புடவைகளை விரும்பி வாங்குகிறேன், கோவையின் மென்மையான பருத்திப் புடவைகள் உள்ளிட்டவை மிகவும் பிடிக்கும் என்றார்.
நைனா ஷா பேசுகையில், என்னுடைய பணிக்காக பல நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைத்தது. இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் சென்று அங்குள்ள பழக்க வழக்கங்களை, வரவேற்பைப் பார்த்துள்ளேன்.
இந்தியா வரும் வெளிநாட்டினர் பலரும் பிரமிக்கும் விஷயங்களில் ஒன்றாக சோழர்கள் வரலாறு உள்ளது. அடுத்து வந்தே பாரத் ரயில் சேவையை அவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். இங்கிலாந்திலிருந்து வந்த ஒருவர் வந்தே பாரத் ரயிலில் காலை உணவு கொடுத்ததைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள். ராணி லட்சுமிபாய், பெண்களைக் கொண்டு ஒரு ராணுவ படையையே அந்தக் காலத்தில் நடத்தியிருப்பது பற்றி பெருமையுடன் பார்க்கிறார்கள் என்றார்.
Travel blogger Karthik Murali said that people should move towards experiential tourism.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.