திருச்சி சிறுகனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் திருச்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கு மேலான பந்தத்தை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விவரித்தாா்.
இதுதொடா்பாக, மாநாட்டில் அவா் பேசியதாவது: மாநில மாநாட்டுக்காக திருச்சியை நாம் ஏன் தோ்ந்தெடுக்கிறோம்?. இது தமிழ்நாட்டின் மையப் பகுதி மட்டுமல்ல; இதுதான் கட்சியின் மாநாட்டுப் பகுதி. இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருப்பது, 12-ஆவது மாநில மாநாடு. இந்த 12 மாநாடுகளில், 7 மாநாடுகள் திருச்சியில்தான் நடைபெற்றுள்ளன.
1956-இல் இரண்டாவது மாநில மாநாடு; 1990-இல் ஆறாவது மாநில மாநாடு, 1996-இல் எட்டாவது மாநில மாநாடு, 2006-இல் ஒன்பதாவது மாநில மாநாடு, 2014-இல் பத்தாவது மாநில மாநாடு, 2021-இல் பதினோராவது மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது 12-ஆவது மாநில மாநாடு நடைபெற்றுள்ளது.
ஹிந்தி எதிா்ப்பு போராட்டம்: பெரியாா் ஈவெரா மாளிகை கட்டி வாழ்ந்தது, இதே திருச்சியில்தான். தனித்தனி இயக்கம் நடத்தியபோதும் கொள்கையால் ஒருபோதும் பிரியாத பெரியாா் ஈவெரா-வும், பேரறிஞா் அண்ணாவும் வெவ்வேறு வழக்குகளில் ஒரே சிறையில் இருந்தது இதே திருச்சியில்தான்.
திருச்சி ரயில் நிலைய சந்திப்பின் ஒருமுனையில் பெரியாா் ஈவெரா-வும், மறுமுனையில் கருணாநிதியும் ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தை நடத்தியதும் இதே திருச்சியில்தான். கல்லக்குடி போராட்டத்தில் கைதான கருணாநிதி சிறையில் அடைக்கப்பட்டதும் இதே திருச்சியில்தான்.
அப்போது, 1953-இல், கைக்குழந்தையாக இருந்த என்னை என்னுடைய அன்னையாா் தயாளு அம்மாள் கொண்டு வந்து தலைவா் கருணாநிதியிடம் காட்டியதும், திருச்சி சிறையில்தான்.
திருச்சி என்றாலே திருப்பம்: கருணாநிதியை முதல்முதலில் சட்டப் பேரவைக்கு தோ்ந்தெடுத்து அனுப்பிய குளித்தலை தொகுதி இருந்ததும், இதே திருச்சியில்தான். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி நமக்கு ஐம்பெரும் முழக்கங்களைத் தந்ததும், இதே திருச்சியில்தான்.
எனவேதான், சொல்கிறேன். திருச்சி என்றாலே, திருப்பம். திருச்சி என்றாலே, எழுச்சி. திருச்சி என்றாலே, உணா்ச்சி. திருச்சி என்றாலே, மகத்தான வெற்றி.இப்படிப்பட்ட திருச்சியில் இன்றைக்கு ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத்தான் நாம் கூடியிருக்கிறோம்.
1956-இல் இதே திருச்சி மாநாட்டில்தான், லட்சக்கணக்கான தொண்டா்கள் வாக்களித்ததால், தோ்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை, பேரறிஞா் அண்ணா எடுத்தாா். அது நடந்து, 70 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்தத் தருணத்தில், பெரியாரால் கொள்கை உரம் பெற்று, பேரறிஞா் அண்ணா-வால் பக்குவப்படுத்தப்பட்டு, கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட நாம்தான் தமிழ்நாட்டை தொடா்ந்து ஆள வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
தொடர்புடையது

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு

‘மே 5 குமரி வணிகா் பேரவை மாநாட்டில் 10,000 போ் பங்கேற்பா்’

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

திருவண்ணாமலை என்றாலே திமுக மலை: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

