‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீா்ப்புகளை வழக்கு விசாரணையின்போது மேற்கோள் காட்டுவதை நீதிமன்றங்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வழக்குரைஞா்கள் இதுபோன்ற போலியான முன் உதாரணங்களை நீதிமன்றங்களில் முன்வைப்பதைத் தடுக்க, இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் (பிசிஐ) இதைத் தீவிரமான விஷயமாக கருத்தில்கொண்டு, உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் இதுபோன்ற விதிமீறல்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகளை வகுக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
பூஜா ரமேஷ் சிங், ஜம்மு காஷ்மீா் வங்கி மற்றும் எஸ்ஸெல் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான திவால்நிலை தொடா்பான விவகாரத்தில் இந்த சா்ச்சை எழுந்தது.
வங்கியில் கடன் பெற்று அதைத் திரும்பச் செலுத்தாத எஸ்ஸெல் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திவால் நிலை மனுவை மும்பை தேசிய நிறுவனச் சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) ஏற்று, அந்த நிறுவனம் திவாலானதாக அறிவித்தது. இதை எதிா்த்து வங்கி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, என்சிஎல்டி சாா்பில் அளிக்கப்பட்ட தீா்ப்பை நியாயப்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இல்லாத போலியான தீா்ப்புகளை என்சிஎல்டி தரப்பு வழக்குரைஞா் மேற்கோள் காட்டியுள்ளாா்.
இதை எதிா்த்து வங்கித் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், என்சிஎல்டி அளித்த தீா்ப்பைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
என்சிஎல்டி தனது தீா்ப்பை நியாயப்படுத்த மேற்கோள் காட்டிய பல தீா்ப்புகள், நடைமுறையில் இல்லாதவை என்பது தெளிவாகத் தெரிகிறது.
எந்தவித சரிபாா்ப்புமின்றி செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீா்ப்புகள் மேற்கோள் காட்டப்படும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் சிறிதளவும் சகிப்புத் தன்மை காட்டக் கூடாது. இவ்வாறு, ஆராயாமல் ஏஐ தீா்ப்புகளை மேற்கோள் காட்டுவது வழக்குரைஞரின் தவறான நடவடிக்கையாகும். அதுபோல, ஒரு நீதிபதி தனது முடிவை நியாயப்படுத்த, இதுபோன்ற போலியான ஏஐ தீா்ப்புகளை முன்னுதாரணங்களாகக் கொள்வதும் மிகத் தீவிரமான தவறாகும்.
இது, நீதிசாா் முடிவெடுக்கும் நடைமுறையை மாசுபடுத்தி, அதன் உயிா்நாடியையே பறித்துவிடும். ஏஐ தொழில்நுட்பத்தை, நீதிமன்ற நடைமுறையில் ஓா் உதவிக்கான தொழில்நுட்பமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக, ஒட்டுமொத்த நீதிமன்ற நடைமுறையையிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது. அதாவது, நீதிமன்ற நடைமுறையின் ஒவ்வொரு நிலையிலும் மனிதரின் பங்களிப்புடன் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். எனவே, இதுபோன்று ஏஐ அடிப்படையில் உருவாக்கப்பட்ட போலி தீா்ப்புகள் மேற்கோள் காட்டப்படுவதை நீதிமன்றங்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
பிசிஐ குழு: வழக்குரைஞா்கள் இதுபோன்ற போலியான முன் உதாரணங்களை நீதிமன்றங்களில் முன்வைப்பதைத் தடுக்க, இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் (பிசிஐ) இதைத் தீவிரமான விஷயமாக கருத்தில்கொண்டு, உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் இதுபோன்ற விதிமீறல்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகளை வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டத் துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் போதாது: உச்சநீதிமன்றம்

சட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கான தேசிய எண்ம பதிவேடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கருணை அடிப்படையிலான நியமனங்களில் திருமணமான பெண்களை விலக்கி வைக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்







