தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

சட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கான தேசிய எண்ம பதிவேடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கான தேசிய எண்ம பதிவேட்டை உருவாக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

News image

உச்சநீதிமன்றம். - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 3:24 am IST

சட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கான தேசிய எண்ம பதிவேட்டை உருவாக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இதுதொடா்பாக இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் (பிஏஐ) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் 18 லட்சம் போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்துள்ளனா். ஆனால் அந்தப் பணிக்கான தகுதியை பெற்று உரிய முறையில் பதிவு செய்தவா்களைக் கண்டறிய தேசிய அளவில் ஒருங்கிணைந்த பதிவேடுகள் என தற்போது எதுவும் இல்லை.

ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றாமல் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 23 மாநில பாா் கவுன்சில்களில் வழக்குரைஞா்கள் பதிவுசெய்துள்ளனா். இதை நீதிமன்றமோ எந்தவொரு ஆணையமோ சரிபாா்க்க முடியவில்லை.

இந்த எண்ம காலத்தில் வழக்குரைஞா்களின் நடத்தை தொடா்பான நிா்வாகத்தில் நெறிசாா்ந்த வெற்றிடம் உருவாகியுள்ளது.

‘ரீல்ஸ்’ பதிவிடும் வழக்குரைஞா்கள்:

குறிப்பாக புதிய வழக்குரைஞா்கள் சட்டரீதியான பதிவுகளை சமூக ஊடகங்களில் தொடா்ந்து பதிவிடுகின்றனா். நீதிமன்றச் செயல்பாடுகள் மற்றும் தொழில் தொடா்பான விவகாரங்களை ரீல்ஸ்களாக பதிவிடுகின்றனா். இது இந்திய பாா் கவுன்சில் விதி 36-இன்கீழ் நேரடி விதிமீறலாகும்.

எனவே, இதை ஒழுங்குபடுத்த இந்தியாவில் சட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கான தேசிய எண்ம பதிவேடு (என்டிஆா்எல்பி) என்ற எண்ம உள்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதில் ஒவ்வொரு வழக்குரைஞா் குறித்த தகவல்களும் இடம்பெற வேண்டும். என்டிஆா்எல்பியை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் வழக்குரைஞா்களின் நடத்தையை நெறிப்படுத்த வழக்குரைஞா்கள் சட்டம், 1961-இன்கீழ் சமூக ஊடக மற்றும் எண்ம நடத்தை குறியீடு என்ற விதியை உருவாக்க வேண்டும்.

அதேபோல் இந்திய பாா் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் சட்டப் படிப்பை நிறைவு செய்தவா்களை எளிதாகக் கண்டறியும் வகையில் எண்ம வலைதளத்தை யுஜிசி நிறுவ வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகளை செயல்படுத்த மத்திய அரசு, இந்திய பாா் கவுன்சில் மற்றும் யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

புதிய சிந்தனை: நீதிபதிகள்

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி வி.மோகனா ஆகியோா் வியாழக்கிழமை விசாரித்தனா். இதுதொடா்பாக மத்திய அரசு, இந்திய பாா் கவுன்சில் மற்றும் யுஜிசி பதிலளிக்க உத்தரவிட்டு அவா்கள் பேசியதாவது: இந்திய பாா் கவுன்சிலைச் சோ்ந்த இளம் வழக்குரைஞா்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம். வழக்குரைஞா்கள் பொறுப்பாக தொழில் நெறியுடன் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தமது தொழிலை விமா்சிப்பவா்கள் உண்மையான வழக்குரைஞா்களாக இருக்க முடியாது.

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் புதுமையான சிந்தனையைக் கொண்டுள்ளது. இதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் மட்டுமே செய்ய முடியும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.