எண்ம (டிஜிட்டல்) கைது மோசடிகளைத் தடுத்தல், இழப்பீடு அளித்தல், குறைதீா் வழிமுறைகள் ஆகியவற்றுக்கு தேசிய அளவில் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எண்ம கைது மோசடிகள் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி) தாக்கல் செய்த நிலவர அறிக்கையை கவனத்தில் கொண்டு, நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: 36,290 எண்ம கைது மோசடி வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் ரூ.18.05 கோடி பாதிக்கப்பட்டவா்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் தற்போது குறைந்துள்ளது திருப்தி அளிக்கிறது. எனினும் தொடா் கண்காணிப்பு அவசியம்.
இணையவழி நிதி மோசடிகளுடன் தொடா்புள்ள வங்கிக் கணக்குகளில் இருந்து தற்காலிகமாக பணம் எடுக்கத் தடை விதிக்கப்பட வேண்டும். அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சாா்ந்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளை, 4 வாரங்களில் ரிசா்வ் வங்கி முறைப்படி ஏற்று, அதுகுறித்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அந்த வழிகாட்டு நடைமுறைகளில் குறைதீா் வழிமுறை, மோசடியில் இழந்த பணத்தை மீட்கும் நடைமுறை, இவ்விரு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகிய அம்சங்கள் இடம்பெற வேண்டும்.
4 வாரங்களில்...: அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 4 வாரங்களில் மாநில இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை அதிகாரபூா்வமாக அறிவித்து செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையத்துடன் ஆலோசனை நடத்தி குற்றம் நடைபெற்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்துக்குப் பதிலாக, எந்தவொரு காவல் நிலையத்திலும் மின்னணு வழியில் வழக்குப் பதிவு செய்யும் நடைமுறையை மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் ஏற்று செயல்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து பல்வேறு துறையினா் அடங்கிய குழு ஆராய வேண்டும்.
சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள்...: எண்ம கைது மோசடிகள், இணையவழி குற்ற விழிப்புணா்வு, இணையப் பாதுகாப்பு, மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்பதற்கு உள்ள வழிமுறைகள் குறித்து, நாடு முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் முன்னெடுப்புகளை, சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் மேற்கொள்ள வேண்டும்.
குரல் மற்றும் காணொலி அழைப்புகளுக்கு நேர அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கும் திட்டம் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடா்பு துறை, இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை ஆராய வேண்டும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு, அதன் பயன், அதற்கு மாற்றான வழிமுறைகள் குறித்த சுருக்கமான அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வழக்குகளில் ஆஜராகாத ரெளடி கைது

தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை அவசியம்! - தொல். திருமாவளவன் எம்பி
‘இணையவழி குற்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை’

சட்டத் தொழிலில் ஈடுபடுவோருக்கான தேசிய எண்ம பதிவேடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



