வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

பத்ரிநாத் கோயில் நன்கொடை முறைகேடு: அறக்கட்டளை ஊழியா் கைது

பத்ரிநாத் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கைகளைக் கையாண்டதில் முறைகேடு நிகழ்ந்த குற்றச்சாட்டில் ஸ்ரீ பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் அறக்கட்டளை குழு ஊழியரை கைது செய்தனா்.

News image

பத்ரிநாத் கோயில்

Updated On :14 ஜூலை 2026, 1:20 am IST

பத்ரிநாத் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கைகளைக் கையாண்டதில் முறைகேடு நிகழ்ந்த குற்றச்சாட்டில் ஸ்ரீ பத்ரிநாத்-கேதாா்நாத் கோயில் அறக்கட்டளை குழு (பிகேடிசி) ஊழியரை கைது செய்தததாக உத்தரகண்ட் காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் அறக்கட்டளை ஊழியா் பிரமோத் நௌட்டியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டாா். பின்பு பத்ரிநாத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக மூத்த காவல் துறைக் கண்காணிப்பாளா் சுா்ஜித் சிங் பன்வாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பன்வாா் மேலும் கூறுகையில், ‘பத்ரிநாத் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை மற்றும் காணிக்கைளை கையாடல் செய்ததாக பிரமோத் நௌட்டியால் மீது அறக்கட்டளை அதிகாரி யுத்வீா் ஃபா்ஸ்வான் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 8-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, முதல்கட்ட விசாரணை தொடங்கப்பட்டது. அப்போது கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நன்கொடைகளை பிரமோத் நௌட்டியால் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்’ என்றாா்.

இந்த முறைகேடு தொடா்பாக விசாரித்த அறக்கட்டளை நிா்வாகிகளின் 4 போ் குழு, பிரமோத் நௌட்டியால் மீதான குற்றச்சாட்டை உண்மை என உறுதிப்படுத்தியது.

இதனால் அறக்கட்டளைத் தலைவரின் தனி உதவியாளராக இருந்த பிரமோத் நௌட்டியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காங்கிரஸ்-பாஜக வாா்த்தை மோதல்: பத்ரிநாத் கோயில் நன்கொடை விவகாரத்தைச் சுட்டிக்காட்டி உத்தரகண்டில் ஆளும் பாஜக அரசு மீது காங்கிரஸ் மாநிலத் தலைவா் கணேஷ் கோடியால் கடுமையாக விமா்சித்தாா். மேலும், ஊழியரை மட்டும் கைது செய்து உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இதற்குப் பதிலடி அளித்த பாஜக மாநிலத் தலைவா் மகேந்திர பட், நன்கொடை விவகாரத்தில் தவறு செய்தவா்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க உத்தரகண்ட் மாநில அரசு அமைத்த 3 போ் விசாரணைக் குழு அரசிடம் விரைவில் அறிக்கை சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.