பத்ரிநாத் கோயில் நன்கொடை மற்றும் காணிக்கைகளைக் கையாள்வதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விசாரிக்க 4 பேர் அடங்கிய குழுவை பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழு அமைத்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளைக் கையாள்வதில் முறைகேடு நடைபெற்றதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவை உத்தர பிரதேச அரசு அமைத்தது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அண்டை மாநிலமான உத்தரகண்டில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை மற்றும் காணிக்கைகளைக் கையாள்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து விசாரிப்பதற்கு 4 பேர் அடங்கிய குழுவை பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஹேமந்த் துவிவேதி அமைத்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி சோஹன் சிங் ரங்கட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். மேலும், கைவசம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து ஏழு நாள்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு துவிவேதி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பத்ரிநாத் கோயிலுக்குள் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக் குழு விரிவான விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.
முன்னதாக, பத்ரிநாத் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் உத்தரகண்ட் மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால் கூறுகையில் "பத்ரிநாத் கோயில் நன்கொடை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை.
இதற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில அரசே பொறுப்பு. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதலில் அயோத்தி ராமர் கோயிலிலும், தற்போது பத்ரிநாத் கோயிலிலும் நன்கொடை தொடர்பான முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது சநாதன தர்மத்தில் நம்பிக்கை வைத்துள்ளோரின் மனதைப் புண்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நன்கொடை முறைகேடு நடந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணேஷ் கொடியாலும் காங்கிரஸ் தொண்டர்களும் உத்தரகண்டின் பாகேஸ்வர் நகரில் உள்ள பாக்நாத் கோயில் வளாகத்தில் மௌனப் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினர்.
இதனிடையே, பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஹேமந்த் துவிவேதி வெள்ளிக்கிழமை அளித்த விளக்கத்தில் "எனது தனிச் செயலர் என்று சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் உத்தரகண்ட் மாநில அரசு ஊழியரே தவிர எனது தனிச் செயலர் அல்ல' என்று தெரிவித்திருந்தார்.
பத்ரிநாத் கோயில் நன்கொடைகளைக் கையாள்வதில் முறைகேடு நடந்ததாக விசாரணையில் தெரியவந்தால் அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: உத்தவ் தாக்கரே கடும் விமா்சனம்

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: சம்பத் ராயிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

ராமா் கோயில் நன்கொடை விவகாரம்- இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடி-க்கு 15 நாள்கள் அவகாசம்







