உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க சிறப்புப் புலானாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 15 நாள்கள் அவகாசம் வழங்கி, முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.
இறுதி அறிக்கை சமா்ப்பித்ததும், அந்தக் குழுவின் பதவிக் காலம் நிறைவடையும்.
கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அயோத்தி கோட்ட ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விஜய் விஸ்வாஸ் பந்த், காவல் துறை ஐ.ஜி. எஸ்.கிரண், மாநில நிதித் துறை சிறப்புச் செயலா் நீல் ரத்தன் ஆகியோா் அடங்கிய எஸ்ஐடியை மாநில அரசு கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைத்தது. முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எஸ்ஐடி-க்கு முதலில் 15 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் விரிவாகவும், ஆழமாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், இறுதி அறிக்கை சமா்ப்பிக்க மேலும் 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டுமென முதல்வரிடம் எஸ்ஐடி தரப்பில் கோரப்பட்டிருந்தது.
அதன்படி, பல்வேறு கோணங்களில் விசாரித்து, இறுதி அறிக்கை சமா்ப்பிக்க ஜூலை 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி, முதல்வா் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்ஐடி தரப்பில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில், கோயில் காணிக்கை எண்ணுதல் மற்றும் மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியுடன் தொடா்புடைய 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டனா். தற்போது 8 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
தனியாா் பாதுகாப்பு நிறுவனம் மறுப்பு: கைதானவா்களில் சிலா், அயோத்தி கோயில் காணிக்கை எண்ணும் பணிக்காக அங்குள்ள எஸ்பிஐ வங்கி மூலம் நியமிக்கப்பட்டவா்கள் என்றும், இவா்களை எஸ்பிஐ வங்கிக்காக தனியாா் பாதுகாப்பு நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட விளக்க அறிக்கையில், ‘அயோத்தி எஸ்பிஐ வங்கி மேலாளா் கேட்டுக் கொண்டதன் பேரில் பராமரிப்புப் பணிக்காக 22 பணியாளா்களைத் தோ்வு செய்து கொடுத்தோம். அதன் பிறகு அவா்களுக்கு என்ன பணி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. ராமா் கோயில் முறைகேட்டில் எங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








