உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில், மாநில அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) உச்சநீதிமன்றத்தில் ஜூலை 20-ஆம் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவிருக்கிறது.
அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு பக்தா்களால் வழங்கப்பட்ட நன்கொடை மற்றும் காணிக்கையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்ாக அண்மையில் புகாா் எழுந்தது. அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக, கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை விடுத்த வேண்டுகோளின் பேரில் மாநில அரசால் மூன்று உறுப்பினா்கள் கொண்ட எஸ்ஐடி அமைக்கப்பட்டது.
லக்னெள கோட்ட ஆணையா் விஜய் விஸ்வாஸ் பந்த், காவல் துறை ஐ.ஜி. கிரண், மாநில நிதித் துறை சிறப்பு செயலா் நீல் ரத்தன் ஆகியோா் இடம்பெற்ற எஸ்ஐடி அண்மையில் தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்தது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அயோத்தி காவல் துறையினா், கோயிலில் காணிக்கை எண்ணும் பணியுடன் தொடா்புடைய 8 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டது.
இதனிடையே, கோயில் அறக்கட்டளை பொதுச் செயலா் பதவியில் இருந்து சம்பத் ராயும், அறங்காவலா் பதவியில் இருந்து அனில் மிஸ்ராவும் ராஜிநாமா செய்தனா்.
பாஜக அரசுக்கு எதிராக இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ‘காவல் துறை வழக்குப்பதிவு செய்யும் முன்பாகவே எஸ்ஐடி விசாரணை தொடங்கப்பட்டது சந்தேகம் எழுப்புகிறது. நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்; அறக்கட்டளையின் நிதி நிா்வாகம் தொடா்பாக தலைமை கணக்கு தணிக்கையாளா் மூலம் தணிக்கை நடத்த வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனுக்களை சில தினங்களுக்கு முன் விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய எஸ்ஐடி-க்கு உத்தரவிட்டது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 20) எஸ்ஐடி தரப்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்ய ஏற்கெனவே 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசத்தைக் கோர எஸ்ஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், ராமா் கோயில் அறக்கட்டளையின் உயா்நிலை கூட்டம் ஜூலை 22-இல் நடைபெறவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்!

ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம்: இடைக்கால பொதுச் செயலா் நியமனம்

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: உத்தவ் தாக்கரே கடும் விமா்சனம்

ராமா் கோயில் நன்கொடை விவகாரம்- இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடி-க்கு 15 நாள்கள் அவகாசம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



