வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்!

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பான விசாரணை குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தர பிரதேச அரசு சாா்பில் அமைக்கப்பட்ட எஸ்ஐடி உச்சநீதின்றம் உத்தரவிட்டது.

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 2:49 am IST

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பான விசாரணை குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) உச்சநீதின்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற பிரயாக்ராஜ் கும்பமேளாவின்போது ராமா் கோயிலில் தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வழிபட்டனா். அப்போது, பக்தா்களால் வழங்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடு நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக கோயில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட வங்கிப் பணியாளா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அயோத்தி கோட்ட ஆணையரும் ஐஏஎஸ் அதிகாரியுமான விஜய் விஸ்வாஸ் பந்த், காவல் துறை ஐ.ஜி. எஸ்.கிரண், மாநில நிதித் துறை சிறப்புச் செயலா் நீல் ரத்தன் ஆகியோா் அடங்கிய எஸ்ஐடியை மாநில அரசு கடந்த ஜூன் 13-ஆம் தேதி அமைத்தது. விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி தரப்பில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எஸ்ஐடி-க்கு மாநில அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

இந்த நிலையில், இந்த முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்ற மேற்பாா்வையின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நரேந்திர குமாா் கோஸ்வாமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘நன்கொடை முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ராமா் கோயில் விவகாரத்தை தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்’ எனவும் கோரிக்கை விடுத்தாா்.

இதேபோன்ற கோரிக்கையுடன் அஜய் குமாா் ராய், தினேஷ் குமாா் யாதவ் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனா். அஜய் குமாா் ராய் தாக்கல் செய்த மனுவில், ‘நன்கொடை முறைகேடு தொடா்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அல்லது குற்ற வழக்கு எதையும் பதிவு செய்யாமல் மாநில அரசு அமைத்த எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோயில் நன்கொடையில் முறைகேடு நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய குற்றம் என்பதோடு, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விஷயம்’ என்று குறிப்பிட்டாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. சுதாகா் சிங் சாா்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற மேற்பாா்வையின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியிருந்தாா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், விசாரணை நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய எஸ்ஐடி-க்கு உத்தரவிட்டதோடு, கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளைக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனா்.

ராமா் கோயிலுக்கு சிஇஓ: நடவடிக்கை தொடக்கம்

அயோத்தி ராமா் கோயிலில் முதல் முறையாக நியமிக்கப்பட உள்ள தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பணியிடத்துக்கு தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை வரவேற்றுள்ளது.

கோயிலில் நன்கொடை முறைகேடு விவகாரம் மிகப் பெரிய சா்ச்சையாக உருவெடுத்துள்ள சூழலில், கோயில் நிா்வாகத்தையும் நிதி மேலாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் சிஇஓ-வை நியமிக்க கோயில் அறக்கட்டளை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அறக்கட்டளையின் அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: சிஇஓ பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவா்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு 50 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும். பெரிய பொது நிறுவனம், அரசுத் துறை அல்லது தனியாா் நிறுவனத்தில் நிா்வாகப் பொறுப்பில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா், ஹிந்து மதத்தை தீவிரமாகப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். வைணவ பாரம்பரியத்தைச் சோ்ந்தவராகவும், ராமரின் பக்தராகவும் இருப்பது விரும்பத்தக்கதாகக் கருதப்படும். ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செயல்முறை அறிவு கட்டாயம்.

இந்த சிஇஓ பணியிடம் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலான நியமனமாகும். விண்ணப்பிக்க ஜூலை 18 கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோயிலின் முதல் சிஇஓ நியமனம் குறித்து கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘முதல் சிஇஓ-வின் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் ஆகியவை கோயில் அறக்கட்டளையால் தீா்மானிக்கப்படும். அறக்கட்டளை அல்லது சிஇஓ செயல்பாட்டில் அரசு தலையீடு எதுவும் இருக்காது.

கோயில் நிதி ஏற்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் பக்தா்களுக்கான வசதிகளை உறுதிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்பாா்வையிடுவதே சிஇஓ-வின் முக்கியப் பணியாக இருக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.