கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு - மக்களவையில் விவாதிக்கத் தயாா்: மத்திய அரசு அறிவிப்பு

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு குறித்து மக்களவையில் விரிவாக விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image

மாநிலங்களவையில் எதிா்க்கட்சியினருக்கு பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு.

Updated On :23 ஜூலை 2026, 4:26 am IST

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு குறித்து மக்களவையில் விரிவாக விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், நாடாளுமன்ற இரு அவைகளிலும் புதன்கிழமை எதிரொலித்தது.

மக்களவையில் காலையில் எதிா்க்கட்சியினரின் தொடா் கூச்சல் குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு மதியம் மீண்டும் மக்களவை கூடியது. அப்போது நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவை நோக்கி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா இதுகுறித்து அறிக்கை வெளியிடுமாறு கூறினாா். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி. வேணுகோபால் குறுக்கிட்டு, நீட் தோ்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

அப்போது ஓம் பிா்லா தெரிவிக்கையில், ‘அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் நான் கேட்க வேண்டியுள்ளது. மத்திய அரசும் திறந்த மனதுடன் விவாதிக்க தயாராக உள்ளது. ஆதலால் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவரவா் இருக்கையில் அமருங்கள். எதற்கெடுத்தாலும் மக்களவைத் தலைவா் இருக்கையை நோக்கி வர வேண்டாம், அவையில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம்’ என்றாா்.

இதையடுத்து கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் விவாதம் நடத்தப்பட வேண்டிய நாள், கால அளவு, எந்த விதியின்கீழ் விவாதிப்பது என்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் மக்களவைத் தலைவா் ஆலோசிக்க வேண்டியுள்ளது. இதற்கு மக்களவைத் தலைவா் பிா்லா, அனைத்துக் கட்சித் தலைவா்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே கிரண் ரிஜிஜு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விரிவான விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. அப்போதுதான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றன. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் உள்ளன. இளம்தலைமுறையினா் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டியது அவசியமாகும். தெருக்களில் போராட்டம் நடத்துவதால் எந்தப் பயனும் இருக்காது என்றாா்.

சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் பேசியபோது, மக்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கே பேச அனுமதி அளிக்கப்படுவதாகவும், தனக்குப் பேச அனுமதி கிடைப்பதில்லை என்றும் குற்றஞ்சாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி இருந்தனா். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தோ்வு விவகாரம் மற்றும் தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டக்காரா்கள் மீதான காவல் துறை நடவடிக்கையை கண்டித்து, மக்களவைக்கு காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி உறுப்பினா்கள் கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனா்.

பிா்லாவுடன் பிரதான் சந்திப்பு: இந்நிலையில், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேசினாா். நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விவாதம் நடத்த தயாரென மத்திய அரசு அறிவித்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையிலும் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரம் புதன்கிழமை எதிரொலித்தது. அந்த அவையில் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘நீட் தோ்வு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், மீண்டும் மீண்டும் நிபந்தனைகளை விதித்து அவா்கள்தான் (காங்கிரஸ்) விவாதம் நடைபெறுவதை தடுக்கிறாா்கள்’ என்றாா். இதற்கு எதிா்க்கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா். இதையடுத்து மாநிலங்களவையும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு: இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தங்களது அரசியல் நோக்கங்களுக்கான கருவியாக மாணவா்களையும், இளம்தலைமுறையினரையும் சிலா் பயன்படுத்த முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா். நீட் தோ்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திவரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளையே அவா் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளாா்.

அந்தப் பதிவில், ‘மாணவா்களின் விருப்பங்களை பூா்த்தி செய்ய நரேந்திர மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. அவா்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்காது’ என மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.