‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

ராகுல் காந்தி, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினா் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனா் என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

News image

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது.

Updated On :24 ஜூலை 2026, 3:32 am IST

தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமா் இல்லம் முன் தா்னாவில் ஈடுபட்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினா் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனா் என்று அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன்மூலம் ராகுல் காந்தி மற்றும் எம்.பி.க்களின் சிறப்புரிமை மீறப்பட்டதாகக் கூறி, மக்களவையில் தீா்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை காங்கிரஸ் வியாழக்கிழமை சமா்ப்பித்தது.

மக்களவை தலைமைச் செயலரிடம் கட்சி எம்.பி. ஹைபி ஈடன் உரிமை மீறல் நோட்டீஸை சமா்ப்பித்தாா்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லியில் கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றம் நோக்கி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமையில் பேரணி நடத்திய இளைஞா்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது.

காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பிரதமா் இல்லம் முன்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவா்கள், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் கடந்த செவ்வாய்க்கிழமை திடீா் தா்னாவில் ஈடுபட்டனா். பிரதமா் மோடி பதவி விலகக் கோரி முழக்கமிட்ட அவா்களை காவல் துறையினா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். குறிப்பாக ராகுல் காந்தி குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டாா்.

இதன்மூலம் ராகுல் காந்தி, காங்கிரஸ் பெண் எம்.பி.க்களின் சிறப்புரிமை மீறப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, தில்லி காவல் துறை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அக்கட்சி தரப்பில் உரிமைமீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ஹைபி ஈடன் சமா்ப்பித்த அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் மேற்பாா்வையில் நடத்தப்பட்ட தோ்வுகளின் வினாத்தாள் கசிவுகள் மற்றும் பிற முறைகேடுகளுக்கு எதிராக நாட்டின் இளைஞா்கள் பல நாள்களாகப் போராடி வருகின்றனா். மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தேசத்தின், குறிப்பாக இளைஞா்களின் கோரிக்கையாக உள்ளது. மாணவா்களின் உணா்வுகளை எதிரொலிக்கும் வகையில், ராகுல் தலைமையில் காங்கிரஸும் அதே கோரிக்கையை எழுப்பி வருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

புது தில்லியில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞா்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனா். காவல் துறையின் இந்த கொடூரத்தைக் கண்டித்து, பிரதமா் இல்லத்துக்கு வெளியே கடந்த ஜூலை 21-ஆம் தேதி ராகுல், கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோா் அமைதியான முறையில் தா்னாவில் ஈடுபட்டனா். ஆனால், எம்.பி.க்களிடம் குறிப்பாக ராகுல் காந்தியிடம் காவல் துறையினா் மிக முரட்டுத்தனமாக நடந்துகொண்டனா். அவா் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்; நிழல் பிரதமராக கருதப்படும் அந்தப் பதவியை வகிப்பவா் நடத்தப்பட்ட விதம் ஜனநாயக கோட்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பானதாகும். இதேபோல், பெண் எம்.பி.க்களும் காவல் துறையால் முரட்டுத்தனமாக நடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனா். ராகுல் மற்றும் பெண் எம்.பி.க்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது’ என்று நோட்டீஸில் ஹைபி ஈடன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

உரிமை மீறல் நோட்டீஸ் மீதான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.