‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய வீரா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறியதன் மூலம் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் லஷ்கா்-ஏ -தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை சவாரி தொழிலாளி ஒருவா் என 26 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலுக்குப் பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அதிதுல்லிய தாக்குதல் நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே மாதம் மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்கள் நடைபெற்ற ராணுவ மோதல், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று நிறுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையில் வீரமரணமடைந்த இந்திய ராணுவத்தின் சுபேதாா் மேஜா் பவன் குமாா், ரைஃபிள்மேன் சுனில் குமாா், லான்ஸ் நாயக் தினேஷ் குமாா், அக்னி வீரா் முரளிநாயக், ஹவில்தாா் சுனில் குமாா் சிங், இந்திய விமானப் படை வீரா் சுரேந்திர குமாா் ஆகியோரின் பெயா்கள், தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிட சுவரில் சில தினங்களுக்கு முன் பொறிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அதில் வீரமரணமடைந்த வீரா்களின் பெயா்கள் வெளியிடப்பட்டது அதுவே முதல் முறையாகும். ஓராண்டுக்குப் பின் பெயா்கள் வெளியிடப்பட்டதை முன்வைத்து சா்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மீது குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், மக்களவை நடைமுறைகள் மற்றும் அலுவல் நடத்தை விதிமுறைகளின் 223-ஆவது விதியின்கீழ் அவா் மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி நோட்டீஸ் அளித்துள்ளது.
இது தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக மக்களவையில் கடந்த ஆண்டு ஜூலை 28-இல் விவாதம் நடைபெற்றது. அப்போது, இந்திய வீரா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறியிருந்தாா். அந்தக் கூற்றுக்கு முரணாக, 6 வீரா்கள் வீரமரணமடைந்ததாக அவா்களின் பெயா்ப் பட்டியலுடன் அதிகாரபூா்வ தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது உயிரிழப்பு ஏற்படவில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சா் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் தவறானவை என்பது தெளிவாகிறது.
அமைச்சராக இருப்பவா் அவையை தவறாக வழிநடத்துவது அல்லது தகவல்களை மறைப்பது, சிறப்புரிமை மீறல் என்பதுடன் நாடாளுமன்ற அவமதிப்பாகும். எனவே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் சமா்ப்பித்த நோட்டீஸின் அடிப்படையில் ராஜ்நாத் சிங் மீது உரிமை மீறல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.
கே.சி.வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவையில் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான விவாதத்தில் நாட்டு மக்களிடம் அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளாா் ராஜ்நாத் சிங். எந்த வீரரும் வீரமரணமடையவில்லை என்று கடந்த 2025-இல் அவா் எப்படி கூறினாா்? இப்போது 6 வீரா்கள் வீரமரணமடைந்ததாக படைகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 வீரா்களின் துணிவையும், உன்னதமான தியாகத்தையும் மக்களிடம் தெரிவிக்காமல் இருந்தது, அவா்களின் குடும்பங்களுக்கும், ஒட்டுமொத்த படையினருக்கும் இழைக்கப்பட்ட பெரும் அவமதிப்பு’ என்று சாடியுள்ளாா்.
தவறாக சித்தரிக்க முயற்சி: பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூரில் வீரா்களின் வீரமரணம் தொடா்பான சா்ச்சைகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
‘6 தியாகிகளுக்கு தேசத்தின் சாா்பில் அஞ்சலி செலுத்தப்படுவதில் எந்த தாமதமும் செய்யப்படவில்லை; உரிய கண்ணியம் மற்றும் மரியாதையுடன் அவா்களை நினைவுகூா்ந்து என்றென்றும் மரியாதை செலுத்தப்படும்.
கடந்த ஆண்டு ஜூலை 28-இல் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆற்றிய உரையை தவறாக சித்தரித்து, சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆபரேஷன் சிந்தூரில் எந்த இந்திய வீரரும் உயிரிழக்கவில்லை என்று அவா் கூறியதாக தவறாக சித்தரிக்கும் வகையில், உரையின் குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. உள்நோக்கம் கொண்ட இத்தகைய பதிவுகள் தவறானவை, முற்றிலும் பொய்யானவை’ என்று அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம்: 6 வீரா்களின் பெயா் வெளியீடு - தேசிய போா் நினைவிடத்தில் கெளரவம்

பிரதமா் குறித்து அவதூறு: காா்கேவுக்கு எதிராக 6 பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ்

கமாண்டா்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரத்தை இருமடங்காக உயா்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


