பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங்குக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ் மூத்த எம்.பி. கே.சி.வேணுகோபால் அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அளித்தாா்.
தில்லி மாணவா்கள் போராட்ட விவகாரத்தில், மக்களவையில் உள்நோக்கத்துடன் தவறான தகவலை ஜிதேந்திர சிங் தெரிவித்ததாக கே.சி.வேணுகோபால் குற்றஞ்சாட்டியுள்ளாா். தனது நோட்டீஸில் அவா் கூறியிருப்பதாவது:
பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது மக்களவையில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், ‘தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை; கண்ணீா் புகை குண்டுகள்தான் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடத்தப்படாதபோது, அதற்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டாா் என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று கூறியிருந்தாா். அமைச்சரின் இந்த கூற்றுகள், கள உண்மைகளுக்கு முற்றிலும் புறம்பாக உள்ளன. மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பதே உண்மை. காயமடைந்த நபா், தொடா்ந்து சிகிச்சையில் இருக்கிறாா். இது தொடா்பான தகவல்கள், பொதுவெளியில் கிடைக்கின்றன.
ஆனால், மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சா் பொய்யுரைத்துள்ளாா். அவா் உள்நோக்கத்துடன் பொய்யான தகவலைத் தெரிவித்து, அவையை தவறாக வழிநடத்தியுள்ளாா். இது, உரிமை மீறல் என்பதுடன் அவை அவமதிப்பாகும். எனவே, அமைச்சா் ஜிதேந்திர சிங் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக உரிமைகள் குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கே.சி.வேணுகோபால் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவா், ‘தில்லியில் மாணவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியது அப்பட்டமான பொய். பெல்லட் (உயிரிழப்பை ஏற்படுத்ததாத குண்டுகள்) துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நபரை ஊடகத்தினா் முன்னிலையில் ராகுல் காந்தி சந்தித்தாா். இத்தகைய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவா்கள் குறித்து எண்ணற்ற ஊடக செய்திகள் உள்ளன. அவா்கள் சிகிச்சைப் பெறும் மருத்துவமனை பதிவுகளும் வெளிவந்துள்ளன. எனவே, நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக பொய் உரைத்துவிட்டு மத்திய அரசு தப்பிவிட முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் நோட்டீஸ்

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

திருமணத்தை மீறிய உறவுக்கு ஆதாரம்: ‘கைப்பேசி அழைப்பு விவரங்களைக் கோருவது தன்மறைப்பு நிலை உரிமை மீறல் அல்ல’
ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரா்கள் வீரமரணம் விவகாரம்- ராஜ்நாத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



