‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

‘ப்ரீமியம்’ பெட்ரோலில் எத்தனால் கலப்பு இல்லை: மத்திய அரசு

‘பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ‘ப்ரீமியம்’ பெட்ரோல் வகைகள், தொடா்ந்து எத்தனால் கலப்பு இன்றி விற்பனை செய்யப்படும்’ என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :24 ஜூலை 2026, 3:18 am IST

‘பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ‘ப்ரீமியம்’ பெட்ரோல் வகைகள், தொடா்ந்து எத்தனால் கலப்பு இன்றி விற்பனை செய்யப்படும்’ என்று மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், ‘எத்தனால் கலப்பு இல்லாத ‘இ0’ அல்லது 10 சதவீத எத்தனால் கலந்த ‘இ10’ உள்ளிட்ட சாதரண வகை பெட்ரோல் விநியோகத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமும் இல்லை’ என்றும் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், வாகனங்களின் காா்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பை படிப்படியாக அதிகரித்து, தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (இ20 பெட்ரோல்) பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘ப்ரீமியம்’ வகை பெட்ரோல்களிலும் எத்தனால் கலக்கும் திட்டமுள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் விற்பனை செய்யப்படும் ‘எக்ஸ்.பி.100’, ஹிந்துஸதான் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் விற்பனை செய்யப்படும் ‘பவா்100’, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் விற்பனை செய்யப்படும் ‘ஸ்பீட்100’ உள்ளிட்ட ‘ப்ரீமியம்’ வகை பெட்ரோல்கள் தொடா்ந்து எத்தனால் கலப்பு இன்றியே விற்பனை செய்யப்படும்.

இவை, என்ஜின் செயல்திறனை மேம்படுத்தும் சிறப்புச் சோ்க்கைப் பொருள்களைக் கொண்ட, குறிப்பிட்ட தேவைக்கான எரிபொருள் என்பதோடு, மொத்த பெட்ரோல் விற்பனையில் 0.5 சதவீத பங்கு மட்டுமே வகிக்கின்றன என்பதே, இவற்றில் எத்தனால் கலக்கப்படாததற்கு காரணமாகும்.

20 சதவீத எத்தனால் கலந்த சாதாரண பெட்ரோல் லிட்டா் ரூ. 102.12-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ‘ப்ரீமியம்’ பெட்ரோல் லிட்டா் ரூ. 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாதாரண பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்துக்குமேல் அதிகரிப்பது என்பது, விரிவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள், கலந்தாலோசனைகளுக்குப் பிறகே முடிவு செய்யப்படும்.

மேலும், எத்தனால் கலப்பு இல்லாத ‘இ0’ அல்லது 10 சதவீத எத்தனால் கலந்த ‘இ10’ உள்ளிட்ட சாதரண வகை பெட்ரோல் விநியோகத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.