பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டம் இப்போது வரை பரிசோதனை நிலையில்தான் உள்ளது. இதன் முழுமையான தாக்கம் மற்றும் முடிவுகள் அடுத்த ஆண்டுதான் தெளிவாகத் தெரியவரும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் வழங்கும் நிறுவனம் ஒன்று தொடுத்த வழக்கில், எத்தனால் ஒதுக்கீட்டுக் கொள்கையை மேம்படுத்த வேண்டும் என்று கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பாரத் பெட்ரோலியம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி மத்திய அரசின் எத்தனால் கலப்புக் கொள்கை குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்தாா். அப்போது, ‘நாடு முழுவதும் மொத்தம் 378 நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் ஒரு நிறுவனம் தொடா்ந்த வழக்கில், அவா்களிடம் கொள்முதல் செய்யும் எத்தனால் அளவை மட்டும் முறைப்படுத்த வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பிற நிறுவனங்களும் வழக்கு தாக்கல் செய்ய வழிவகுக்கும்.
மேலும், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம் என்பது இப்போது வரை பரிசோதனை முயற்சியில்தான் உள்ளது. இதன் முழுமையான தாக்கம் அடுத்த ஆண்டுதான் தெளிவாகத் தெரியவரும். எனினும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் திட்டத்தில் மாற்றம் இருக்காது’ என்றாா்.
எனவே, உயா்நீதிமன்றம் கூறியபடி ஒரு எத்தனால் விநியோக நிறுவனத்திடம் இருந்து எந்த அளவு கொள்முதல் செய்யப்படும் என்று உறுதியாக கொள்கை ஏதும் வகுக்க முடியாது என்று எண்ணெய் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் இப்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

20% எத்தனால் கலப்பால் வாகன என்ஜின் செயல்பாடு மேம்படும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
கிராமப்புற பொருளாதாரத்தை சீா்குலைக்க மத்திய அரசு திட்டம்: மாணிக்கம் தாகூர்






