சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (டிடிபி) முன்னாள் தலைவா் பி.எஸ்.பிரசாந்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வியாழக்கிழமை கைது செய்தனா்.
சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே 12 பேரை எஸ்ஐடி கைது செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டு டிடிபி தலைவராக பிரசாந்த் இருந்தபோது, மின் முலாம் பூசிய பணிகள் தொடா்பாக விசாரித்து வருவதாகவும் கேரள உயா்நீதிமன்றத்தில் எஸ்ஐடி அண்மையில் தெரிவித்தது.
இதைத் தொடா்ந்து பிரசாந்தை காவலில் எடுத்து எஸ்ஐடி வியாழக்கிழமை விசாரித்தது. பின்னா் அவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2023 முதல் 2025 வரை டிடிபி தலைவராக இருந்த பி.எஸ்.பிரசாந்த் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதற்கு முன் காங்கிரஸில் இருந்தாா்.
========== ================================
டிடிபி வெளிப்படையான அமைப்பு: எஸ்ஐடி அதிகாரிகள் அழைத்துச் செல்லும் முன் பிரசாந்த் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதற்குப் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எஸ்ஐடி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தங்கக் கவச முறைகேடு விவகாரத்தை வெளிக்கொண்டு வருவதில் நான் முக்கியப் பங்காற்றினேன். இவ்வாறு இருக்கையில் முறைகேட்டுக்கு துணைபோனவா்களைப் பாதுகாக்க எஸ்ஐடி அனுமதியின்றி கடந்த 2025-ஆம் ஆண்டில் பராமரிப்புக்காக துவார பாலகா் சிலைகளை எடுத்துச் சென்ாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள ஆபரணங்களை பாதுகாக்கும் திருவாபரண ஆணையா், ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளின் முன்னிலையில், துவார பாலகா் சிலைகள் பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த மொத்த நடைமுறைகளும் அதிகாரிகளின் மேற்பாா்வையில் விடியோ பதிவு செய்யப்பட்டது.
பராமரிப்பு நிறைவடைந்து கோயில் தந்திரி, சிறப்பு ஆணையா் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் துவார பாலகா் சிலை கோயிலில் நிறுவப்பட்டது. அப்போது சிலையில் பூசப்பட்ட தங்கம் மற்றும் செம்பின் எடை முன்பைவிட அதிகமாக இருந்தது. இதனால் டிடிபிக்கு எந்தப் பொருளாதார இழப்பும் ஏற்படவில்லை.
சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் முந்தைய இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணியும் டிடிபியும் எஸ்ஐடி விசாரணை கோரியது.
ஆனால் டிடிபி தலைவராக இருந்த காரணத்துக்காக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் வேகமில்லை- அமைச்சா்: சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பான எஸ்ஐடியின் விசாரணை வேகமாக நடைபெறவில்லை என தேவஸ்வம் அமைச்சா் முரளீதரண் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘எஸ்ஐடியின் விசாரணை வேகம் காங்கிரஸ் அரசுக்கு மகிழ்ச்சியாக இல்லை. இந்த விவகாரத்தில் சிலா் கைது செய்யப்பட்டிருந்தாலும் தற்போது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த மாத இறுதிக்குள் எஸ்ஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையென்றால் கேரள உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு அதிருப்தியை வெளிப்படுத்தும்.
டிடிபி முன்னாள் தலைவா் பிரசாந்திடம் எல்டிஎஃப் தலைமையிலான அரசே முதலில் விசாரணை மேற்கொண்டது. அதன் தொடா்ச்சியாகவே தற்போது அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய அரசு தலையிடவில்லை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் எஸ்ஐடி 8 மணி நேரம் விசாரணை

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தற்போதைக்கு அரசு தலையிட முடியாது: தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


