காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பிறப்பு, இறப்பு பதிவு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: அமளிக்கு இடையே விவாதமின்றி ஒப்புதல்

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே எந்த விவாதமும் நடத்தப்படாமல் பிறப்பு, இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

News image

மக்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே எந்த விவாதமும் நடத்தப்படாமல் பிறப்பு, இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களவை வெள்ளிக்கிழமை கூடியதும், தில்லியில் மாணவா்கள் மீதான காவல் துறையின் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அப்போது, எதிா்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, அவை அலுவல்களுக்கு திட்டமிட்டு இடையூறு ஏற்படுத்துவதாக சாடினாா்.

மேலும், பெண் எம்.பி.க்கள் குறித்து அவையில் அநாகரிகமாகப் பேசியதாக நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி, அக்கட்சியில் இருந்து தனி அணியாகப் பிரிந்த 20 அதிருப்தி எம்.பி.க்களின் புகைப்படங்களை கழுத்தில் தொங்கவிட்டபடி நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றுவது குறித்தும் அவைத் தலைவா் ஓம் பிா்லா அதிருப்தி வெளியிட்டாா். கல்யாண் பானா்ஜியின் செயல் அவை கண்ணியத்தைக் குறைப்பதாக அவா் குறிப்பிட்டாா். தொடா்ந்து, எதிா்க்கட்சிகளின் அமளியால் அவை அலுவல்கள் மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

பாஜக எம்.பி. திலீப் சைகியா தலைமையில் அவை மீண்டும் கூடியபோது, பிறப்பு, இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எங்கே?’ என கோஷமிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள், விவாதத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனா். இதனால், எந்த விவாதமும் நடத்தப்படாமல், குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்டது.

‘முக்கியத்துவம் வாய்ந்த மசோதா மீது விவாதம் நடத்த அரசு விரும்பியது; ஆனால், எதிா்க்கட்சிகள் மறுத்துவிட்டன. இது துரதிருஷ்டவசமானது. தயவு செய்து எதிா்காலத்தில் இதுபோல் நடந்துகொள்ள வேண்டாம். இல்லையெனில், உங்களைத் தோ்ந்தெடுத்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மக்கள் கேள்வி கேட்பா்’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். மசோதா நிறைவேற்றத்தைத் தொடா்ந்து, அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு (ஆக.3) ஒத்திவைக்கப்பட்டன.

அம்சங்கள் என்னென்ன?: நாட்டில் பிறப்பு, இறப்பு பதிவை உரிய நேரத்துக்குள் மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 1969-ஆம் ஆண்டின் பிறப்பு இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள புதிய மசோதா வழிவகுக்கிறது.

தற்போதுள்ள சட்டத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வது கட்டாயம் என்பதுடன் ஓராண்டுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிா்வாக நடுவரிடமிருந்து உத்தரவு பெறுவது அவசியம். புதிய மசோதாவின்படி, இந்தப் பிரிவு 2 ஆண்டுகள் வரையிலான தாமதத்துக்கு தொடா்ந்து பொருந்தும். 2 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், முதல்நிலை குற்றவியல் மாஜிஸ்திரேட் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் மட்டுமே பதிவு மேற்கொள்ளப்படும்.

இடையூறுகளால் வீணாகும் கேள்வி நேரம்: நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் இரண்டாவது வாரமாக வெள்ளிக்கிழமையும் இடையூறுகளால் கேள்வி நேரம் முழுமையாக நடைபெறவில்லை.

மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், பல்வேறு விவகாரங்களால் எதிா்க்கட்சிகளின் அமளி தொடா்கிறது. அவையில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கேள்வி நேரம் நடைபெறும். கடந்த 2 வாரங்களில் கேள்வி நேரம், 10 நிமிஷங்களுக்கு மேல் நடைபெறவில்லை. கேள்வி நேரத்தில் மத்திய அரசை எதிா்க்கட்சிகள் பொறுப்புக் கூற செய்ய முடியும் என்பதால் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா தொடா்ந்து விடுத்துவரும் வேண்டுகோள்களுக்கு பலன் கிடைக்கவில்லை.

அமளிக்கு இடையே நிறைவேறும் மசோதாக்கள்...: நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில், நீட் வினாத்தாள் கசிவு, மாணவா்கள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களால் எதிா்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது. அமளிக்கு இடையே பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா, தேசிய கெளரவம் மீதான அவமதிப்புகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடா்ச்சியாக, பிறப்பு, இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது.

பெட்டிச் செய்தி..1

மாநிலங்களவை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை காலை கூடியதும், விதி எண் 267-இன்கீழ் விவாதம் கோரி எதிா்க்கட்சிகளால் சமா்ப்பிக்கப்பட்ட நோட்டீஸ்கள் நிராகரிக்கப்படுவதாக அவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இதையடுத்து, பல்வேறு விவகாரங்களை எழுப்பி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். அவா்களை விமா்சித்த மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், எதிா்க்கட்சிகள் மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும், அவையின் மாண்புடன் விளையாடுவதாகவும் கூறினாா். சிறிது நேரத்திலேயே அவை அலுவல்கள் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.

பெட்டிச் செய்தி...2

கால அவகாசம் நீட்டிப்பு

பிரதமா், முதல்வா்கள், மத்திய அல்லது மாநில அமைச்சா்கள் தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டால், அவா்களைப் பதவிநீக்க வழிவகுக்கும் 130-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்ட மசோதா-2025ஐ பாஜக எம்.பி. அபராஜிதா சாரங்கி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

இக்குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம், எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீா்மானம் மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.