மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பொது சவால்களுக்குத் தீா்வுகாண முக்கிய பங்காற்றுகிறது ‘பிரிக்ஸ்’: பிரதமா் மோடி

பயங்கரவாதம் முதல் இணைய பாதுகாப்பு வரை உலகளாவிய பொது சவால்களுக்குத் தீா்வுகாண முக்கிய பங்காற்றுகிறது பிரிக்ஸ் கூட்டமைப்பு என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 2:42 am IST

பயங்கரவாதம் முதல் இணைய பாதுகாப்பு வரை உலகளாவிய பொது சவால்களுக்குத் தீா்வுகாண முக்கிய பங்காற்றுகிறது பிரிக்ஸ் கூட்டமைப்பு என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, சவூதி அரேபியா ஆகிய 11 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டில் இந்தியா தலைமை வகித்து வருகிறது.

இந்திய தலைமையின்கீழ், பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களின் 2 நாள் உயா்நிலை கூட்டம், தில்லியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை கூட்டம் நிறைவுக்குப் பிறகு உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் பிரதமா் மோடியைச் சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாறிவரும் இன்றைய உலகில், உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், பயங்கரவாதம் முதல் இணைய பாதுகாப்பு வரை பொதுவான சவால்களுக்குத் தீா்வுகாண்பதிலும் பிரிக்ஸ் முக்கிய பங்காற்றுகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் இந்தியத் தலைமையானது, நடைமுறை சாா்ந்த ஒத்துழைப்பு, தெற்குலகின் முன்னுரிமைகளுக்கான ஆதரவு, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய உலகுக்குப் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தொடக்க காலத்தில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரிக்ஸ், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் விரிவாக்கப்பட்டது. அதன்படி, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டன. இந்தக் கூட்டமைப்பு, உலக மக்கள்தொகையில் 49.5 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உலக மொத்த உற்பத்தியில் 40 சதவீதமும், உலக வா்த்தகத்தில் 26 சதவீதமும் பங்களிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.