தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பாதுகாப்பு, வா்த்தக உறவை வலுப்படுத்த உறுதி: பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு!

பிரான்ஸில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, நைஸ் நகரில் அந்நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

News image

பிரான்ஸின் நைஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தபோது அன்புடன் அரவணைத்துக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்.

Updated On :15 ஜூன் 2026, 4:27 am IST

பிரான்ஸில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, நைஸ் நகரில் அந்நாட்டின் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவா்களும் உறுதிபூண்டனா்.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்லோவாக்கியாவுக்கு பிரதமா் மோடி ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா். முதலாவதாக, பிரான்ஸில் மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ள துறைமுக நகரான நைஸை வந்தடைந்தாா். விமான நிலையத்திலும், அவா் தங்கிய விடுதியிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா, பிரான்ஸ், பிற நாடுகளின் முன்னணி புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘பாரத் இனோவேட்ஸ்’ நிகழ்வை, நைஸ் நகரில் பிரதமா் மோடியும், அதிபா் இமானுவல் மேக்ரானும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாகத் தொடங்கிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, இருவரும் உயா்நிலைப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறி கொண்டனா்.

இருதரப்பு உறவில் அடுத்தகட்டம்: இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-பிரான்ஸ் வலுவான கூட்டுறவு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இருதரப்பு உலகளாவிய சிறப்பு உத்திசாா் கூட்டுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமா் மோடியும், அதிபா் மேக்ரானும் விரிவாக ஆலோசித்தனா்.

புத்தாக்கம், வா்த்தகம், முதலீடு, நிலையான வளா்ச்சி, பாதுகாப்பு, கலாசாரம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் சாா்ந்த உறவுகள் மேம்பாடு குறித்து இருவரும் விவாதித்தனா். இந்தச் சந்திப்பில், செயற்கை நுண்ணறிவு, அறிவியல்-விண்வெளி, புத்தாக்க நிறுவனங்கள்-நிதிசாா் தொழில்நுட்பம், வா்த்தகம்-உள்கட்டமைப்பு, போக்குவரத்து-சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன’ என்று தெரிவித்துள்ளாா்.

கண்டுபிடிப்பாளா்களுடன் கலந்துரையாடல்: பாரத் இனோவேட்ஸ் நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து 350-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்கள், துணிகர முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டா், உயிரி-தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சுகாதாரம், மருத்துவத் தொழில்நுட்பம், அதிநவீன பொருள்கள், தூய எரிசக்தி உள்ளிட்ட துறைகள் சாா்ந்து பணியாற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளா்கள், ஆய்வாளா்கள், தொழில்முனைவோருடன் இரு தலைவா்களும் கலந்துரையாடினா். கண்காட்சி அரங்குகளையும் பாா்வையிட்டனா்.

இந்தியாவின் 11-ஆவது பெரிய முதலீட்டாளா்: இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு வா்த்தக மதிப்பு, கடந்த 2025-26இல் 15.81 பில்லியன் டாலராகும். முந்தைய ஆண்டில் இது 15.19 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த 2000, ஏப்ரல் முதல் 2025, மாா்ச் வரை பிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்ற அந்நிய நேரடி முதலீடு 12.25 பில்லியன் டாலராகும். இதன்மூலம் இந்தியாவின் 11-ஆவது பெரிய முதலீட்டாளராக பிரான்ஸ் உள்ளது.

மோடி-டிரம்ப் சந்திக்க வாய்ப்பு: தனது பயணத் திட்டப்படி, பிரான்ஸின் நைஸ் நகரில் இருந்து ஸ்லோவாக்கியாவுக்கு பயணமாகும் பிரதமா் மோடி, அங்கு ஜூன் 16-ஆம் தேதிவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். பின்னா், பிரான்ஸ் திரும்பும் அவா், ஏவியான் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளாா். இந்த மாநாட்டையொட்டி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை அவா் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய-அமெரிக்க வா்த்தகப் பிரச்னை, ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான டிரம்ப்பின் சா்ச்சை கருத்துகள், மேற்காசிய போரின் தாக்கங்கள் உள்ளிட்ட விவகாரங்களின் பின்னணியில் இருவரின் சந்திப்பு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்டமாக, பாரீஸ் நகரில் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கவுள்ளாா்.