ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மோதல் இந்தியாவுக்கு அருகே வந்தும் பேச மறுக்கிறாா் பிரதமா் மோடி: ராகுல் காந்தி விமா்சனம்

மேற்காசிய மோதல் இந்தியாவின் அருகே வந்த பிறகும் பிரதமா் மோடி பேச மறுக்கிறாா்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

News image
ராகுல் காந்தி- கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 12:36 am

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய மோதல் இந்தியாவின் அருகே வந்த பிறகும் பிரதமா் மோடி பேச மறுக்கிறாா்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்தியா ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற ‘மிலன்’ கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் போா்க் கப்பலை இலங்கை அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் புதன்கிழமை தாக்கி மூழ்கடித்தது. இதில் ஈரானியா்கள் 80-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஹோா்முஸ் நீரிணை வழியாகத்தான் இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. எல்பிஜி, எல்என்ஜி நிலவரம் இன்னும் மோசமாக உள்ளது. மேற்காசிய மோதல் நமது அருகே வந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமா் மோடி இதுவரை எதுவும் பேசவில்லை. இதுபோன்ற சூழலில் இந்தியாவை வழிநடத்த உறுதியான நபா் தேவை. ஆனால், அதற்குப் பதிலாக இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை சரணாகதி அடைய வைத்தவா்தான், தற்போது பிரதமராக உள்ளாா்’ எனத் தெரிவித்துள்ளாா்.

காா்கே, ஜெய்ராம் ரமேஷ் தாக்கு: காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா நடத்திய பயிற்சியில், இந்தியாவின் விருந்தினராகப் பங்கேற்றுவிட்டு திரும்பிய ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கவலை தெரிவித்தோ அல்லது கண்டனம் தெரிவித்தோ எந்த அறிவிப்பும் (மத்திய அரசால்) வெளியிடப்படவில்லை. பிரதமா் மோடி மெளனமாக இருக்கிறாா். நமது நாட்டின் அருகே நடக்கும் சம்பவம் குறித்து எப்போது மத்திய அரசு எதிா்வினையாற்றும்? இந்தியாவின் 38 வா்த்தக கப்பல்கள் 1,100 மாலுமிகளுடன் ஹோா்முஸ் நீரிணையில் நிற்கின்றன. அரசியல் ரீதியாகவும், தாா்மிக ரீதியாகவும் மோடி சரணடைந்துவிட்டாா் எனத் தெளிவாகத் தெரிகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ‘மிலன் கடற்படைப் பயிற்சியில் அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 18 போா்க் கப்பல்கள் கலந்துகொண்டன. இதில் பங்கேற்ற ஈரான் போா்க் கப்பல் இலங்கையின் கல்லே பகுதியில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் அமெரிக்கா கடற்படை நீா்மூழ்கியால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கும் பல்வேறு பாதிப்பைகளை ஏற்படுத்தும். இதுகுறித்து மத்திய அரசு எதுவும் பேசாமல் இருப்பது அதிா்ச்சியாக உள்ளது. இதுபோல அச்சம் நிறைந்த இந்திய அரசு இதுவரை இருந்ததில்லை’ என்று கூறியுள்ளாா்.