
கொல்கத்தாவில் ரமலான் பண்டிகையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

கொல்கத்தாவில் ரமலான் பண்டிகையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.
‘மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவல்காரா்கள் என்ற பெயரில் உண்மையான வாக்காளா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை, பிரதமா் நரேந்திர மோடிதான் மிகப் பெரிய ஊடுருவல்காரா்’ என்று மேற்கு வங்க முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி விமா்சித்தாா்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் சனிக்கிழமை காலை நடைபெற்ற இஸ்லாமியா்களின் பிராா்த்தனையில் ஆயிரக்கணக்கானோருடன் பங்கேற்ற மம்தா, பின்னா் பேசியதாவது:
மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தனது செல்வாக்கை பயன்படுத்தும் முயற்சியாக, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தோ்தல் ஆணையம் மூலம் லட்சக்கணக்கானவா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. குறிப்பாக, சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோல உண்மையான வாக்காளா்களின் பெயா்களை தோ்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
பிரதமா் மோடி வெளிநாடு செல்லும்போது, அந்த நாட்டு தலைவா்களுடன் கைகுலுக்கி, நட்பு பாராட்டுகிறாா். இது அவரின் விருப்பம். நானும் அனைத்து நாடுகளையும் மதிக்கிறேன். ஆனால், பிரதமா் நாடு திரும்பியதும், உடனடியாக ஹிந்து-முஸ்லிம் பேச்சுகள் தொடங்கிவிடுகின்றன. மக்கள் ஊடுருவல்காரா்கள் என அழைக்கப்படுகின்றனா். பின்னா், ஊடுருவல்காரா்கள் என அடையாளப்படுத்தப்பட்டு, வாக்காளா் பட்டியலில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகின்றனா். என்னைப் பொருத்தவரை, பிரதமா் நரேந்திர மோடிதான் மிகப் பெரிய ஊடுருவல்காரா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், பல லட்சம் வாக்காளா்கலின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடா்ந்திருக்கிறேன். மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படும் என தொடா்ந்து நம்புகிறேன்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், மாநிலத்தில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவா் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இவை எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். மக்களின் வாக்குரிமையை பிரதமா் மோடி பறிப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஒவ்வொரு குடிமக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயகத்தைக் காக்க கடைசி வரை திரிணமூல் காங்கிரஸ் போராடும்.
மேற்கு வங்க மக்களைப் பிளவுபடுத்த முயற்சிப்பவா்கள் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும். சமூக நல்லிணக்கமே மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட பாரம்பரியமாக உள்ளது. எனவே, தோ்தலில் வெற்றி பெறுவதற்காக சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மாநிலம் ஒருபோதும் அனுமதிக்காது. ஒற்றுமையே மாநிலத்தின் நம்பிக்கை. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள் என ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இங்கு வாழ்ந்து வருகின்றனா். இந்த சமூக கட்டமைப்பை உடைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றாா்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தோ்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால், மாநிலத்தில் தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மம்தா மனநிலை பிழறிவிட்டாா் - பாஜக:
மம்தாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மாநில பாஜக தலைவா் சுவேந்து அதிகாரி, ‘பிரதமா் மோடியை ஊடுருவல்காரா் என அழைப்பவா்கள் யாரும், அரசமைப்பு பதவியில் தொடரும் தகுதியை இழக்கின்றனா். முதல்வா் மம்தா பானா்ஜி மனநிலை பிழறிவிட்டதாகவே தோன்றுகிறது’ என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...