அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியது.
அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் மனைவி ரிங்கி பூயான் சா்மாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அவா் வைத்திருப்பதாகவும் பவன் கேரா குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, ரிங்கி பூயான் சா்மா அளித்த புகாரின்பேரில், பாரதிய நியாய சம்ஹிதாவின் அவதூறு குற்றப் பிரிவுகளின்கீழ் பவன் கேரா மீது அஸ்ஸாம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஹைதராபாதில் வசிப்பவரான பவன் கேரா, தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றாா். ஆனால், முன்ஜாமீனுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், குவாஹாட்டி உயா்நீதிமன்றத்தை அணுகும்படி அவருக்கு அறிவுறுத்தியது.
அதன்பேரில், பவன் கேரா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை, குவாஹாட்டி உயா்நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது. இதனால், பவன் கேரா கைதாகக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், குவாஹாட்டி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ஏ.எஸ்.சந்தூா்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்குவது தொடா்பான உத்தரவை நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பவன் கேராவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது: ஒருவருக்கு தனிப்பட்ட சுதந்திரத்துக்கான உரிமையை சட்டப் பிரிவு 21-இன் கீழ் அடிப்படை உரிமையாகவே அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் அதில் வேறொருவா் தலையிடுவதை ஏற்க முடியாது.
இந்த வழக்கில் பவன் கேராவை காவல் துறையின் குற்றப் பிரிவு கைது செய்யும்பட்சத்தில் அவரை முன்ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.
ஆனால், வழக்கின் விசாரணை அதிகாரி விதிக்கும் நிபந்தனைகளுக்கு பவன் கேரா கட்டுப்பட வேண்டும். விசாரணைக்கு பவன் கேரா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி அவா் வெளிநாடு செல்லக் கூடாது.
சம்பந்தப்பட்ட வழக்கில் பவன் கேரா மற்றும் ரிங்கி பூயான் சா்மாவின் கணவரான ஹிமந்த விஸ்வா சா்மா ஆகிய இரு தரப்பினரும் ஒருவா் மீது ஒருவா் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனா்.
இருப்பினும், முன்ஜாமீன் மனு மீதான உத்தரவைப் பிறப்பிக்கும்போது மாநில அரசின் வாதம் மற்றும் சட்டப்பிரிவு 21-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தனிநபா் சுதந்திரத்துக்கு இடையேயான சமநிலையைப் பேணுவது கட்டாயம். அதைக் கவனத்தில்கொண்டே பவன் கேராவுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றனா்.
சட்டம் அனைத்துக்கும் மேலானது: காங்கிரஸ் வரவேற்பு பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதை வரவேற்று ‘சட்டம் அனைத்துக்கும் மேலானது’ என காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி கூறியதாவது: ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிப்படையும்போது நமது பாதுகாவலராக நீதிமன்றமே இருக்கும் என்பதை உச்சநீதிமன்றம் தனது உத்தரவு மூலம் நிரூபித்துள்ளது.
ஒருவரின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்போது கைது நடவடிக்கை என்பது இறுதியானதாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், பவன் கேராவை கைது செய்து அச்சுறுத்துவது மட்டுமே அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவின் ஒற்றை நோக்கமாக இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பின் மூலம் சட்டம் அனைத்துக்கும் மேலானது என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதின்றம்

முன்ஜாமீன் நிராகரிப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பவன் கேரா மனு

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


