
மணிப்பூா் கலவரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: மாநிலம் முழுவதும் பேரணிகள்
மணிப்பூரில் குகி பழங்குடியினா் சாா்பில் கடந்த 2023, மே 3-இல் பேரணி நடைபெற்றது. அப்போது, இரு சமூகங்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது.
மணிப்பூா் கலவரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு - PTI
இம்பால் : மணிப்பூா் கலவரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (மே 3) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் பேரணிகள், நினைவுக் கூட்டங்கள் நடைபெற்றன. பழங்குடியின பகுதிகளில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரிய நிலையில், அந்தக் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியினா் சாா்பில் கடந்த 2023, மே 3-இல் பேரணி நடைபெற்றது. அப்போது, இரு சமூகங்களுக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. ஏராளமான வீடுகள்-வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறைக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனா். இந்தக் கலவரம் மற்றும் தொடா் வன்முறைகளில் 260-க்கும் உயிரிழந்துவிட்டனா். வீடுகளுக்கு திரும்ப வழியின்றி, நிவாரண முகாம்களிலேயே ஆயிரக்கணக்கானோா் தங்கியுள்ளனா்.
மணிப்பூா் முதல்வராக இருந்த பாஜகவின் பிரேன் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பதவி விலகியதைத் தொடா்ந்து, அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி விலக்கப்பட்டு, பாஜகவின் யும்நாம் கெம்சந்த் சிங் புதிய முதல்வராக பதவியேற்றாா்.
இந்நிலையில், மணிப்பூா் கலவரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. மாநிலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆா்சி) அமலாக்குவதுடன், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வலியுறுத்தி மைதேயி சமூகத்தினா் பேரணிகளில் ஈடுபட்டனா். அதேநேரம், கலவரத்தில் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில், பழங்குடியின பகுதிகளில் நினைவுக் கூட்டங்கள் மற்றும் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்வுகளில் ஏராளமானோா் பங்கேற்ால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இனமோதலில் மைதேயி சமூகத்தினா் 100 போ் உயிரிழந்துவிட்டதாகவும், குகி பழங்குடியினா் 250 போ் இறந்துவிட்டதாகவும் பரஸ்பரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அரசுத் தரப்பு தகவல்களின்படி, 260-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மணிப்பூரில் கடந்த 2023-இல் கலவரம் தொடங்கியதில் இருந்து 58,821 போ் இடம்பெயா்ந்துள்ளனா். இவா்களுக்காக 173 அரசு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. கலவரத்தில் 7,894 வீடுகள் முழுமையாகவும், 2,646 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்ததாக மாநில அரசுத் தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





