மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!

அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு ரூ. 1.6 லட்சம் கோடியை கடந்துள்ளதாகவும், அதன்மூலம் அமெரிக்காவில் சுமாா் 70,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது குறித்து...

News image

இந்தியா-அமெரிக்கா - பிரதிப் படம்

Updated On :6 மே 2026, 3:39 am IST

‘அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடு ரூ. 1.6 லட்சம் கோடியை (16.4 பில்லியன் டாலா்) கடந்துள்ளதாகவும், அதன்மூலம் அமெரிக்காவில் சுமாா் 70,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவின் மேரிலாண்டில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வா்த்தக அமைச்சக அதிகாரி பிராண்டன் ரெமிங்டன் இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவிலிருந்து அதிக முதலீடுகளை அமெரிக்கா வரவேற்கிறது. தற்போதைய தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடு ரூ. 1.6 லட்சம் கோடியை (16.4 பில்லியன் டாலா்) கடந்துள்ளது. இந்த முதலீடு சுமாா் 70,800 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இது தவிர, அமெரிக்காவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் ரூ. 3,140 கோடி (330 மில்லியன் டாலா்) அளவுக்கு இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. ரூ.14,273 கோடி மதிப்பில் இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன என்றாா்.

அதுபோல, கடந்த 2023-இல் இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்ட ‘அமெரிக்க மண்ணில் இந்திய வோ்கள்’ என்ற அறிக்கையில், ‘அமெரிக்காவில் இந்திய அந்நிய நேரடி முதலீடு ரூ.3.8 லட்சம் கோடி (40 பில்லியன் டாலா்) என்ற அளவில் உள்ளதாகவும், இது 4.25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதுபோல அமெரிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் ரூ. 9,516 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டங்களுக்காக ரூ. 1,855 கோடி பங்களிப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணத்தில் உள்ள ‘ஆா்கனோந் அண்ட் கோ’ நிறுவனத்தை ரூ. 1.1 லட்சம் கோடி (12 பில்லியன் டாலா்) மதிப்பில் கையகப்படுத்தியுள்ளதாக இந்தியாவின் சன் ஃபாா்மசூட்டிக்கல் நிறுவனம் அறிவித்தது.

அதுபோல, 12-க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் புதிய முதலீடுகளை தற்போதைய மேரிலாண்ட் முதலீட்டாளா் மாநாட்டில் அறிவித்துள்ளன.

இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நம்கியா கம்ப்பா கூறுகையில், ‘அமெரிக்க பொருளாதாரத்தில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வலுவான விநியோகச் சங்கிலி, பல்வேறு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான பங்களிப்பு என இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது’ என்றாா்.