“ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்; ஒர்க் ஃபர்ம் ஹோம் செய்யுங்களேன்” என்று பிரதமர் மோடி பேசியதற்கு கண்டனம் வலுக்கிறது.
ஹைதராபாத் மாநகரில் ஞாயிற்றுக்கிழமை(மே 10) நடைபெற்ற வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இப்பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தினால், அந்நிய செலாவணியை சேமிப்பதுடன், போரின் தாக்கங்களையும் குறைக்க முடியும். அந்நிய செலாவணியை சேமிக்க உதவும் வகையில், திருமணத்துக்குத் தங்கம் வாங்குவதை ஓராண்டு நிறுத்திவைக்க வேண்டும்.
வெளிநாட்டுப் பயணங்களையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்” என்றார்.
சிக்கனம் தேவை இக்கணம் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி பேசியிருப்பதாகக் கருதினாலும், பிரதமர் மோடியின் பேச்சு இந்திய பொருளாதாரம் ‘பலவீனம்' அடைந்துள்ளதைக் காட்டுகிறதா? என்றதொரு பெரும் கேள்விக்குறிக்கும் அவர் பரந்த இடமளித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் :
“மக்களிடம் தியாகம் செய்யுங்களேன் என்று மோடி நேற்று கேட்டுக் கொண்டார். அவர் மக்களிடம், பொன் வாங்காதீர், வெளிநாடுகளுக்குச் செல்லாதீர், பெட்ரோலைக் குறைவாகவே பயன்படுத்துங்கள், உரம் பயன்பாட்டையும் சமையல் எண்ணெயையும் கணிசமாகக் குறையுங்கள், மெட்ரோ போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள், வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள் என்றுரைத்திருக்கிறார்.
அரசில் இருப்பவர்கள் இப்படியெல்லாம் சொல்வது தோல்வியடைந்திருப்பதன் சான்றாக அமைந்துவிட்டது. கடந்த பன்னிரண்டாண்டுகளாக நாடு இந்த நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. இப்போது மக்களுக்கு, அவர்கள் என்ன வாங்கலாம்? என்ன வாங்கக் கூடாது? எங்கு செல்லலாம்? எங்கு செல்லக் கூடாது? என்பதைச் சொல்லிக் கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது.
திரும்பவும் அவர்கள் தாங்கள் ஏற்க வேண்டிய பொறுப்பை அப்படியே தூக்கிப் போய் மக்கள் மீது வைத்து காய் நகர்த்தி தப்பித்துள்ளனர். சமரசப் போக்குடனான பிரதமரைக் கொண்டு நாட்டை வழிநடத்துவது என்பது இனிமேலும் சாத்தியமாகாது” எனப் பொருள்படத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சியான சிவ சேனை (உத்தவ் தாக்கரே அணி) முக்கிய தலைவர் பிரியங்கா சதுர்வேதி, “மத்திய அரசின் கொள்கை ரீதியான தோல்வியை” பிரதமரின் பேச்சு வெளிக்காட்டுவதாகத் தெரிவித்தார். அரசின் வெளியுறவுக் கொள்கைகளால் மக்கள் அவதியுற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து, அவர் பேசியதாவது : “மத்திய கிழக்கில் நீடித்துக்கொண்டிருக்கும் சண்டையை சரியாக கையாளாத அரசின் கொள்கை ரீதியான தோல்வியை, குடிமக்களின் வாயிற்படிகளில் கொட்டிவிட்டு அதன்பின், எண்ணெயைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படியும் பயணத்தைக் குறைத்துக்கொள்ளவும் அறிவுறுத்துகிறார்கள்” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார் அணி) தேசிய செய்தித் தொடர்பாளரான க்ளைட் ராஸ்டோ, “பிரதமர் மோடியின் வாதங்களை முதலில் பாஜக பின்பற்ற வேண்டும்” என்றார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : “பாஜக அரசுகளும் தலைவர்களும் தங்களுடன் படையெடுத்து பின்தொடரும் நெடும் கான்வாய் போக்குவரத்தைக் குறைத்துக்கோண்டு பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதன்மூலம், வீட்டிலிருந்தே பணிபுரிவதையும் எரிபொருள் சிக்கனத்தையும் இப்போது முன்னிலைப்படுத்துவார்களா? மேலும், சுதேசி கொள்கையை அமல்படுத்திக்கொண்டு வெளிநாட்டுப் பொருள்களின் பயன்பாட்டையும் கைவிடுவார்களா? அதேபோல, வெளிநாட்டுப் பயணத்தையும் ஓராண்டு காலம் தவிர்ப்பார்களா?” என்று கேட்டுள்ளார்.
காங்கிரஸிலிருந்து மற்றொரு தலைவர் வர்ஷா கெய்க்வாட் இது குறித்து குறிப்பிடும்போது, “மோடி அரசிடம் போதிய திட்டமிடல் இல்லாததால் நாடு இன்னல்களை சந்தித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர், “மோடி ரூ. 8,000 கோடி விமானத்தில் செல்கிறார், விலை மதிப்பு அதிகமுள்ள பொருள்களைப் பயன்படுத்துகிறார், மக்கள் செலவில் அடிக்கடி வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்கிறார்.
பிரதமரும் அவர்தம் அமைச்சர்களும் முதலில் தங்கள் வாழ்க்கை முறையில் எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நரேந்திர மோடி இழைத்த தவறுகளுக்காக ஏன் குடிமக்கள் அவற்றின் பாரத்தைச் சுமக்க வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பி எதிர்வினையாற்றியுள்ளார்.
“தனது கான்வாயில் 100 வாகனங்களுடன் மோடி சாலைவலம் செல்கிறார். ஆனால், மக்களிடம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க அறிவுறுத்துகிறார்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லோந்த் தெரிவித்தார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக: “பிரதமர் மோடி மக்களிடம் தியாகங்களைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், மக்களை அவர் தேச நலம் கருதி செயல்படவே வலியுறுத்தியுள்ளார்.
அந்த வகையில், எரிசக்தி சேமிப்பு, உள்நாட்டு பொருள்களின் பயன்பாட்டை முன்னிலைப்படுத்துதல், அந்நிய செலாவணியைப் பாதுகாத்தல், தற்சார்பு கொள்கையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை அவர் வலியுறுத்தியுள்ளார்” என்று பாஜக தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்கட்சியின் பதிவில், “தேச நலம் கருதி மக்கள் ஈடுபட ஏதேனும் அழைப்பு விடுக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சி செவிகளில் ‘பிரசாரம்’ போல ஒலிக்கிறது. ஏனெனில், அவர்களது அரசியல் என்பது அதிகாரத்தில் இருப்பதே தவிர, தேச கட்டமைப்பு என்பது அவர்களிடம் இல்லை.
உலகளாவிய பிரச்னைகள் ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுமே ‘ஒருவிதத்தில் சமரசம் செய்துகொண்ட பிரதமர்தானே?’” என்று காங்கிரஸுக்கு கேள்வியெழுப்பியுள்ளது.
“பிற நாடுகளில் போர் வெடிக்கும் போது அதன் தாக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நேரு குறிப்பிட்டிருக்கிரார். அப்போது நேரு குறிப்பிட்டது பொறுப்பான தலைமைத்துவம் என்ற கோணத்தில் பார்க்கப்பட்டதா? அல்லது அரசின் மழுப்பலாகப் பார்க்கப்பட்டதா?
மக்களிடம் உண்மையைச் சொல்லி அவர்களிடம் சவால்களை எதிர்கொள்ள கூட்டுப் பங்களிப்பு அவசியம் என்று கேட்டுக்கொள்வதே பொறுப்பான தலைமையின் அடையாளம்” என்றும் பாஜக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Oppn slams PM Modi's austerity appeal, calls it policy failure
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என மோடி சொன்னது ஏன்? சாத்தியமாகுமா?
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!
தெலங்கானாவில் பிரதமர் மோடி! ரூ. 9,400 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
