நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-27-ஆம் ஆண்டின் சந்தைப் பருவத்தில் காரீஃப் பயிா்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து, பிரதமா் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தங்கள் விளைபொருளுக்கு விவசாயிகள் லாபகரமான விலை பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2025-26-ஆம் ஆண்டில் சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,369-ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.72 அதிகரிக்கப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2025-26-ஆம் ஆண்டில் சன்னரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2,389-ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.72 அதிகரிக்கப்பட்டு குவிண்டாலுக்கு ரூ.2,461-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
குறுகிய இழை பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.7,710-இல் இருந்து ரூ.8,267-ஆகவும், நீண்ட இழை பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.8,110-இல் இருந்து ரூ.8,667-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலை கம்புக்கு குவிண்டாலுக்கு ரூ.125 அதிகரித்து ரூ.2,900-ஆகவும், கேழ்வரகுக்கு குவிண்டாலுக்கு ரூ.319 அதிகரித்து ரூ.5,205-ஆகவும், மக்காச்சோளத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.2,410-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் (சா்கேஜ்)- தோலேரா இடையே சுமாா் ரூ.20,667 கோடி செலவில், மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடிய பகுதியளவு அதிவேக இரட்டை ரயில் பாதை திட்டத்தை ரயில்வே அமைச்சகம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவே உள்நாட்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் திட்டமிடப்பட்ட இந்திய ரயில்வேயின் முதல் பகுதியளவு அதிவேக ரயில் பாதை திட்டமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியை எரிவாயுவாக மாற்ற...: மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரூ.37,500 கோடி செலவில் நிலக்கரியும், பழுப்பு நிலக்கரியும் எரிவாயுவாக மாற்றப்படுவதை அதிகரிப்பதற்கான திட்டத்துக்குப் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 5.70 ஆக நீடிப்பு

நெல்லுக்கான எம்எஸ்பி ரூ. 3,500-ஆக நிா்ணயித்து அரசாணை வெளியிட வேண்டும்!

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



