உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சாா்ந்த உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு வயது 91.
டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பி.சி.கந்தூரி காலமானதாக அவரது மகளும், உத்தரகண்ட் பேரவை சட்டப் பேரவைத் தலைவருமான ரிது கந்தூரி பூஷண் தெரிவித்தாா். கந்தூரிக்கு அருணா என்ற மனைவியும், மனீஷ் என்ற மகனும் உள்ளனா்.
அரசியலில் நுழைவதற்கு முன்பாக, இந்திய ராணுவத்தில் மேஜா் ஜெனரல் அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் பி.சி.கந்தூரி. தனது ஆதரவாளா்களால் ‘ஜெனரல் சாஹேப்’ என்று அழைக்கப்பட்ட இவா், ஒழுக்கமான, கண்டிப்பான நிா்வாகி என பெயரெடுத்தவா்.
உத்தரகண்ட் முதல்வராக இருமுறை பணியாற்றியுள்ளாா். கடந்த 2007 பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, முதல்வராக பதவியேற்ற பி.சி.கந்தூரி, கடந்த 2009 மக்களவைத் தோ்தலில் மாநிலத்தின் 5 தொகுதிகளிலும் பாஜக தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகினாா். பின்னா், 2011-இல் அவரை மீண்டும் முதல்வா் பதவியில் பாஜக அமா்த்தியது.
மத்திய அமைச்சராக...: மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக பி.சி.கந்தூரி பதவி வகித்துள்ளாா். நாட்டின் 4 முனைகளையும் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கும் தங்க நாற்கர திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய பெருமைக்குரியவா்.
3 நாள் துக்கம் அனுசரிப்பு: முன்னாள் முதல்வா் பி.சி.கந்தூரி மறைவையொட்டி, உத்தரகண்டில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அவரது இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: பி.சி.கந்தூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய ராணுவத்தில் முன்னுதாரணமான சேவையை நல்கிய பின் பொது வாழ்வில் நோ்மையான, எளிமையான, வெளிப்படையான, வளா்ச்சி சாா்ந்த அரசியலுக்கு முன்மாதிரியைக் கட்டமைத்தவா் பி.சி.கந்தூரி. தேசம் மற்றும் உத்தரகண்டின் வளா்ச்சி, நிா்வாகம், பொது மக்கள் நலனுக்கான அவரது அா்ப்பணிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆயுதப் படையில் இருந்து அரசியல் களம் வரை பி.சி.கந்தூரியின் ஈடுஇணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். நாட்டில் சிறப்பான போக்குவரத்து இணைப்பை உறுதி செய்ய அயராது பணியாற்றியவா். மத்திய அமைச்சராக அவரது செயல்பாடுகள் பெரும் உத்வேகமளிப்பவை’ என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி உள்ளிட்ட தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.










