எரிபொருள் விலை உயர்வு தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடினார்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் நான்கு ஆண்டுகளாக அமலில் இருந்த எரிபொருள் விலை மாற்றத் தடையை நீக்கியதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள்ளாகவே இரண்டாவது முறையாக பெட்ரோல் - டீசல் விலைகள் லிட்டருக்கு சுமார் 90 காசுகள் உயர்த்தப்பட்டன. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து கார்கேவின் கருத்துகள் வெளியாகின.
இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,
சாமானிய மக்களைச் சுரண்டுவதும், அதானிக்கு அமெரிக்காவிலிருந்து கட்டுப்பாடற்ற சலுகையைப் பெற்றுத்தருவது மோடியின் சமரச மாதிரி. பாஜகவிடம் தொலைநோக்குப் பார்வையும், தலைமைத்துவமும் இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.
விலை உயர்வு அறிவிக்கப்பட்டு நான்கு நாள்களிலேயே மோடி அரசு மீண்டும் ஒருமுறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ஒருபக்கம் விலை உயர்த்திவிட்டு, சேமிப்பு குறித்துப் போதித்தபடியே, தங்கள் தோல்விக்கான சுமையை மக்கள் மீது சுமத்தும் முயற்சி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விஸ்வகுரு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொண்டு வீண் பெருமை பேசும் பிரதமர் மோடி ரஷிய எண்ணெயை வாங்குவதற்கான அனுமதியை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துத் தருமாறு அமெரிக்காவிடம் மன்றாடியுள்ளார். ஒவ்வொரு முறையும் 140 கோடி இந்தியர்களின் தன்மானத்திற்குப் பங்கம் விளைவிக்கிறார். முந்தைய எந்தவொரு அரசும் இவ்வளவு கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்ததில்லை.
ரஷிய எண்ணெய் வாங்க நமக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுச் சுமையைச் சாமானிய மக்கள் மீது ஏன் சுமத்த வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நெருக்கடி சமயங்களிலும் பாஜக தலைவர்கள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டுவதாகவும், வெளிநாடுகளில் நிதியுதவியுடன் மக்கள் தொடர்புப் பணிகளைச் செய்வதால் மட்டும் நீங்கள் 'விஸ்வகுரு' ஆகிவிட முடியாது.
பிரதமர் மோடி மக்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும். உண்மையான கேள்விகளிலிருந்து ஓடி ஒளியாதீர்கள். இந்த நெருக்கடி குறித்து உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என பதிலளித்தால் மட்டுமே, மக்களின் உண்மையான சேவகர் என்று அழைக்கப்படுவீர்கள். இல்லையெனில், நீங்கள் வெறும் பிரசாரகராக மட்டுமே இருப்பீர்கள் என்று கார்கே குற்றம் சாட்டினார். இவ்வாறு அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Summary
Congress president Mallikarjun Kharge on Tuesday hit out at Prime Minister Narendra Modi over the fuel price hike, alleging that robbing common people and giving Adani a "free pass" from America is his "compromised model".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











