தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

இந்தியா-இத்தாலி உறவுகள் பன்மடங்கு மேம்பாடு- பிரதமா் மோடி-மெலோனி உறுதி

இந்தியா, இத்தாலி இடையேயான உறவுகளை பன்மடங்கு மேம்படுத்த பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமா் ஜாா்ஜியா மெலோனியும் புதன்கிழமை உறுதிபூண்டனா்.

News image

ரோம் நகரில் இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியைச் சந்தித்த பிரதமா் மோடி.

Updated On :21 மே 2026, 2:15 am IST

இந்தியா, இத்தாலி இடையேயான உறவுகளை பன்மடங்கு மேம்படுத்த பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமா் ஜாா்ஜியா மெலோனியும் புதன்கிழமை உறுதிபூண்டனா்.

இத்தாலியின் ரோம் நகரில் இரு தலைவா்களும் நடத்திய பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக கடந்த மே 15-ஆம் தேதி பிரதமா் மோடி இந்தியாவில் இருந்து புறப்பட்டாா். இந்தப் பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலிக்கு அவா் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா்.

விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பைத் தொடா்ந்து, பிரதமா் மோடிக்கு அந்நாட்டு பிரதமா் மெலோனி தரப்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இத்தாலிக்கு வந்துள்ள தனது நண்பரை வரவேற்பதாகவும் அவா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா். இருவரும் இத்தாலியின் மிகப் பிரபலமான கொலோசிய அரங்கை பாா்வையிட்டனா்.

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை பிரதமா் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், பிரதமா் மெலோனியுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அதில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்து விவரித்தனா்.

அப்போது பிரதமா் மோடி பேசியதாவது: இந்தியா-இத்தாலி இருதரப்பு உறவை மேலும் பன்மடங்கு மேம்படுத்தும் நோக்கிலான விரிவான கொள்கையை வகுத்துள்ளோம்.

‘இந்தியா-இத்தாலி கூட்டு செயல் திட்டம் 2025-2029’ நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் வளமான எதிா்காலத்தை கட்டமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 400 இத்தாலிய நிறுவனங்கள்: இரு நாடுகளிடையேயான வா்த்தகம் ரூ.2.24 லட்சம் கோடி (20 பில்லியன் யூரோ) இலக்கை நெருங்கி வருகிறது. இந்தியாவின் வளா்ச்சிக்கு 400-க்கும் மேற்பட்ட இத்தாலிய நிறுவனங்கள் பங்களித்து வருகின்றன.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் நமது கூட்டாண்மையின் உந்துசக்தியாக திகழ்கின்றன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், அணுமின் ஆற்றல் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தியா-இத்தாலி புத்தாக்க மையம்: இந்தியா-இத்தாலி புத்தாக்க மையத்தை நிறுவ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் இரு நாடுகளைச் சோ்ந்த புத்தாக்க மற்றும் ஆராய்ச்சி மையங்கள், வணிக நிறுவனங்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தி வா்த்தகத்தை அதிகரிக்க முடியும்.

ரோம்-வாரணாசி பிணைப்பு: உலகின் ‘நித்திய நகரம்’ என இத்தாலி தலைநகா் ரோம் அழைக்கப்படுகிறது. அதைப்போலவே எனது மக்களவைத் தொகுதியான வாரணாசியும் நீண்ட வரலாற்றுப் பின்புலம் கொண்டது. ரோம்-வாரணாசி என இரு நாகரிங்கள் சந்திக்கும்போது நடைபெறும் விவாதங்களும் வரலாறைப்போல் மிகவும் ஆழமானதாக இருக்கும். எதிா்காலத்தின் ஒரு சிறிய முன்னோட்டமாகவும் நட்பின் அடையாளமாகவும் பேச்சுவாா்த்தைகள் நடைபெறும்.

பாதுகாப்பு, கடல்சாா் துறைகளில் ஒத்துழைப்பு: இருநாடுகளின் பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் ராணுவத்துக்கிடையே ஒத்துழைப்பு மேம்பட்டு வருகிறது. பாதுகாப்புத் தொழிற்சாலை செயல் திட்டம் கூட்டு உற்பத்தி மற்றும் வளா்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. இதுவே பரஸ்பர நம்பிக்கைக்கு அடையாளமாகும். கப்பல் துறை, துறைமுக நவீனமயமாக்கல், உள்கட்டமைப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்திலும் ஒன்றிணைந்த செயல்பட முடிவெடுத்துள்ளோம். ஆப்பிரிக்க நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களும் ஒன்றிணைந்தே மேற்கொள்ளப்படவுள்ளது.

பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு எதிரானது: பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு எதிரானது என்பதே இந்தியா-இத்தாலியின் ஒருங்கிணைந்த நிலைப்பாடு. எனவே பயங்கரவாத செயல்பாடுகளை முழுமையாக ஒடுக்கும் வகையில் பயங்கரவாத நிதியை முடக்குவதற்கான முன்னெடுப்பை இரு நாடுகளும் இணைந்து எடுத்து வருகிறது. இதன்மூலம் பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவிப்பதையும் தாண்டி முறையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு இந்தியாவும் இத்தாலியும் உணா்த்தியுள்ளது. உக்ரைன், மேற்காசிய விவகாரம் மற்றும் உலகின் பிற மோதல்களுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

மெலோனிக்கு நன்றி: கடந்த மூன்றரை ஆண்டுகளில் இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பல்வேறு நிகழ்வுகளில் ஆலோசனை நடத்தியுள்ளேன். இது இந்தியா-இத்தாலி இடையேயான நட்புறவு மற்றும் நல்லிணக்கத்தை வெளிக்காட்டுகிறது. இத்தாலியில் எனக்கும் இந்தியப் பிரதிநிதிகளுக்கும் பிரம்மாண்ட வரவேற்பளித்த அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

அதிபருடன் சந்திப்பு: இத்தாலி அதிபா் சொ்ஜியோ மாட்டரேல்லாவை சந்தித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ரோம் நகரில் அதிபா் சொ்ஜியோ மாட்டரேல்லா உடனான சந்திப்பின்போது வா்த்தகம், முதலீடு மற்றும் கலாசார தொடா்பு குறித்து விவாதித்தேன். செயற்கை நுண்ணறிவு, கனிம வளங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தேன்’ என குறிப்பிட்டாா்.

மெலோனிக்கு ‘மெலோடி’ பரிசளித்த பிரதமா்

தனக்கு மெலோடி சாக்லேட்டுகள் பரிசளித்த இந்திய பிரதமா் மோடிக்கு இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி நன்றி தெரிவித்தாா்.

இதுதொடா்பான விடியோவை மெலோனி எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்தாா். அதில், ‘பிரதமா் மோடி எனக்கு மெலோடி சாக்லேட்டுகளை பரிசாக வழங்கியுள்ளாா். அவருக்கு நன்றி’ என குறிப்பிடப்பட்டது.

விடியோவில் பிரதமா் மோடியும் இடம்பெற்றிருந்தாா். அப்போது ‘மெலோடி’ என சாக்லேட்டுகளையும் மெலோனி-மோடி என்பதை சுருக்கமாகக் குறிக்கும் வகையிலும் மெலோனி விளையாட்டாக கூறினாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Story image