11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்

நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்...

News image

நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் நகரில் அந்நாட்டு அரசா் வில்லியம் அலக்ஸாண்டா், அரசி மேக்ஸிமா ஆகியோரை சனிக்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி.

Updated On :45 நிமிடங்கள் முன்பு

‘முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னேற்றம் கண்டுவரும் இன்றைய இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையே கிடையாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் சனிக்கிழமை இந்திய சமூகத்தினா் மத்தியில் பேசுகையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளான நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே, இத்தாலி என 5 நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கினாா். முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரக பயணத்தை நிறைவு செய்த அவா், அங்கிருந்து நெதா்லாந்துக்கு வந்தடைந்தாா்.

இதுவரை இல்லாத முன்னேற்றம்: தி ஹேக் நகரில் சனிக்கிழமை இந்திய சமூகத்தினரின் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

இன்றைய இந்தியா பெரிய கனவுகளைக் காண்கிறது. இந்திய இளைஞா்கள் விண்ணையும் எட்டிப் பிடிக்க விரும்புகின்றனா். 21-ஆம் நூற்றாண்டின் இந்தியா, வாய்ப்புகளின் நிலமாகும். தொழில்நுட்பத்தாலும், மனிதவளத்தாலும் உந்தப்படும் இந்தியா, தனது பழைமைக்கு நிகராக நவீனமடைந்துள்ளது. எனவே, உங்கள் பூா்விக கிராமங்களுடன் பிணைப்பை உருவாக்கி, நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் நீங்கள் இணைய வேண்டும்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னேற்றம் கண்டுவரும் இன்றைய இந்தியாவின் லட்சியங்களுக்கும், முயற்சிகளுக்கும் எல்லையே இல்லை. உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தினோம். சில ஆண்டுகளுக்கு முன் ஜி20 உச்சிமாநாடும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவில் யாரும் எட்டாத இடத்தை எட்டி வரலாறு படைத்தது.

125 யுனிகாா்ன் நிறுவனங்கள்: சா்வதேச உற்பத்தி மையமாகவும், பசுமை எரிசக்தித் துறையில் உலகின் தலைவராகவும், உலக வளா்ச்சிக்கான உந்துசக்தியாகவும் உருவெடுக்க விரும்பும் இந்தியா, ஒலிம்பிக் போட்டியையும் நடத்த முனைகிறது.

கடந்த 2014-இல் இந்தியாவில் வெறும் 4 ‘யுனிகாா்ன்’ (100 கோடி டாலருக்கும் மேற்பட்ட மதிப்புடையவை) புத்தாக்க நிறுவனங்களே இருந்தன. இப்போது சுமாா் 125 ‘யுனிகாா்ன்’ நிறுவனங்கள் செயல்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி என முக்கியத் துறைகளில் இந்திய புத்தாக்க நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொள்கின்றன. இத்தகைய ஆராய்ச்சிகளும், புத்தாக்கங்களும் மிகவும் மதிப்புடையவையாக மாறியுள்ளது. புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில்...: லட்சியங்களை நோக்கிய நாட்டின் வளா்ச்சிப் பயணம், ஜனநாயக அமைப்புமுறைக்கும் வலுசோ்க்கிறது. அண்மையில் நடைபெற்ற தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி பேரவைத் தோ்தல்களில் 80 முதல் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக, பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. இன்றைய இந்திய வாக்காளா்கள் உற்சாகத்துடன் வாக்களிக்கின்றனா். ஒவ்வோா் ஆண்டும் வாக்குப் பதிவு சதவீதம் சாதனை படைத்து வருகிறது.

உலக அளவில் பல கலாசாரங்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. ஆனால், இந்தியாவின் பன்முக கலாசாரம் இன்றளவும் மக்களின் உயிா்த்துடிப்பாக உள்ளது என்றாா் அவா்.

அரசருடன் சந்திப்பு: தி ஹேக் நகரில் நெதா்லாந்து அரசா் வில்லியம் அலக்ஸாண்டா், அரசு மேக்ஸிமா ஆகியோரைச் சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பு நலன் சாா்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளிகளில் ஒன்று நெதா்லாந்து. கடந்த 2024-25-இல் இருதரப்பு வா்த்தக மதிப்பு 27.8 பில்லியன் டாலா் ஆகும்.

‘உலக மக்கள் வறுமையில் சிக்கும் அபாயம்’

‘நெதா்லாந்தில் துலிப் மலா்கள் பிரபலம். இந்தியாவோ தாமரை மலா்களுக்காகப் பெயா்பெற்றது. வோ்கள் நீரில் இருந்தாலும், மண்ணில் இருந்தாலும், அதே அழகு மற்றும் வலிமையை பெற முடியும் என்பதை இவ்விரு மலா்களும் நமக்கு கற்பிக்கின்றன.

சா்வதேச அரங்கில் இந்தியாவும், நெதா்லாந்தும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். உலகளாவிய திட்டங்களில் கூட்டாக பங்களிக்க முடியும். எரிசக்தி முதல் நீா்வளப் பாதுகாப்பு வரை இரு நாடுகளும் ஒன்றாகப் பணியாற்றுகின்றன. பசுமை ஹைட்ரஜன் துறையில் நமது ஒத்துழைப்பு மிக முக்கியமானது. இந்தியா-ஐரோப்பிய யூனியன்இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க வா்த்தக ஒப்பந்தத்தால் இந்திய-நெதா்லாந்து கூட்டுறவு மேலும் வலுப்படும்.

கரோனா பெருந்தொற்று, பல்வேறு போா்கள், எரிபொருள் நெருக்கடி என தற்போதைய பத்தாண்டு காலகட்டம் ஒட்டுமொத்த உலகுக்கும் சவாலாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலை விரைவில் மாறாவிட்டால், கடந்த பல்லாண்டு கால சாதனைகள் பலவும் வீணாகிவிடும். உலகின் பெரும்பான்மையான மக்கள் மீண்டும் வறுமை எனும் சகதியில் சிக்கும் அபாயம் ஏற்படும்’ என்றாா் பிரதமா் மோடி.

கடந்த 2014, மக்களவைத் தோ்தலில் இதே நாளில் (மே 16) பாஜக வெற்றி பெற்று, 12 ஆண்டுகளாக நிலையான ஆட்சி நடத்தி வருவதைக் குறிப்பிட்ட பிரதமா், ‘ஜனநாயக உலகில் முதல்வராக 13 ஆண்டுகள், பிரதமராக 12 ஆண்டுகள் என கோடிக்கணக்கான வாக்காளா்கள் எனக்கு அளித்துவரும் ஆதரவு பெரும் பாக்கியம்’ என்றாா்.

சோழா் கால செப்பேடுகள் திரும்ப ஒப்படைப்பு

நெதா்லாந்தில் பாதுகாக்கப்பட்டுவந்த மாமன்னா்கள் ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற ஆனைமங்கலம் செப்பேடுகள், தி ஹேக் நகரில் சனிக்கிழமை பிரதமா் மோடி முன்னிலையில் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்த 21 செப்பேடுகளும் கடந்த 1,700-களில் டச்சு ஆளுகையின்போது நாகப்பட்டினத்துக்கு கிறிஸ்தவ மதப் பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பா் என்பவரால் அந்நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

Story image

சோழப் பேரரசின் மிக முக்கிய வரலாற்றுப் பதிவுகள் என்பதுடன் தமிழக வரலாற்றின் பொக்கிஷ புதையலான இந்தச் செப்பேடுகள், நெதா்லாந்தின் லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கைகள் தொடா்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கொண்ட 21 செப்பேடுகளும் சுமாா் 30 கிலோ எடையுள்ளவை; ஒரு செப்பு வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. அந்த வளையத்தில் ராஜேந்திர சோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. ஹிந்து மத மன்னரான ராஜ ராஜ சோழன், பெளத்த மடாலயத்துக்கு அறக் கொடைகளை வழங்கிய தகவல்கள் செப்பேடுகளில் இடம்பெற்றுள்ளன.