அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

இந்திய செயற்கைக்கோளான 'ஆரியபட்டா' இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்ததைப் பற்றி...

News image

விண்ணை நோக்கி... - படம்: ஏபி.

Updated On :19 ஏப்ரல் 2026, 9:50 pm

- முனைவர் இளங்கோ கட்டிமுத்து

மனிதகுலம் 1950-களில் ஒரு புதிய திறனைப் பெற்றது; அது பூமிக்கு அப்பால் செல்லும் திறனும், இன்றைய புரட்சிகரமான தொழில்நுட்பங்களைப் போன்ற திறனும் ஆகும். யார் அதிக சக்தி வாய்ந்தவர், திறமையானவர் என்பதை உறுதி செய்வதற்காக இரண்டு வல்லரசுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட முயன்றதாலேயே இந்த விண்வெளி தொழில்நுட்பம் உருவானது.

1957-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி ஸ்புட்னிக்-1 செயற்கைக்கோளை புவிவட்டப் பாதையில் செலுத்தியதன் மூலம், உலக நாடுகளின் விண்வெளிப் போட்டியில் முதல் நாடு என்ற வெற்றியை ரஷியா பெற்றது. 1958-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, அமெரிக்காவால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் எக்ஸ்ப்ளோரர்-1 ஆகும். ஜப்பானின் முதல் செயற்கைக்கோளான ஓசுமி 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி ஏவப்பட்டது.

டோங் ஃபாங் ஹாங்-1 இது சீனக் குடியரசின் முதலாவது விண்வெளி செயற்கைக்கோள். இது 1970 ஏப்ரல் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி 'ஆரியபட்டா' செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதைக்கு அனுப்பிய உலகின் 11-ஆவது நாடாக இந்தியா ஆனது. இந்தியாவின் புகழ்பெற்ற கணிதவியலாளர்- வானியலாளர் ஆரியபட்டாவின் நினைவாக செயற்கைக்கோளுக்கு பெயர் சூட்டப்பட்டது.

பூமிக்கு அப்பால் செல்லும் இந்தச் செயல்பாடு, இந்தியா வேகமாக வளர எப்படி உதவும் என்பதை ஆராய்ந்த டாக்டர் ஹோமி பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய் போன்றோர் அப்போது நம்மிடம் இருந்தனர். 1969-இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) நிறுவியதன் மூலம் இந்தியா தனது சொந்த விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது.

1971-ஆம் ஆண்டு தொடக்கத்தில், ஒப்பீட்டளவில் குறைந்த செலவு காரணமாக, முதலில் அமெரிக்காவின் 'ஸ்கௌட்' ராக்கெட்டுடன் பொருந்தக்கூடிய 100 கிலோ எடையுள்ள ஓர் அறிவியல் செயற்கைக்கோளை உருவாக்கும் எண்ணத்தில் இந்தியா இருந்தபோது, சீனாவை விட அதிக எடையுள்ள (350 கிலோ) செயற்கைக்கோளை, இந்தியாவுக்காக விண்ணில் ஏவ ரஷியா முன்வந்தது.

'நாம் விண்வெளியில் நுழைந்து, அதை தேசிய வளர்ச்சிக்காகப் பயன்படுத்த விரும்பினால், இதுவே நமக்குக் கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு. இலவச ஏவுதல், குறைந்தபட்ச செலவினங்களுடன், நாம் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை உருவாக்கி இங்கிருந்து வளர முடியும்' என்று பேராசிரியர் ம. த. ராவ் பரிந்துரைத்தார். ரஷியாவின் இந்த உதவியை ஏற்க இந்தியா முடிவு செய்தது.

1971-ஆம் ஆண்டு டிசம்பரில் சாராபாயின் திடீர் மறைவு, இஸ்ரோவின் முன்னேற்றத்தைத் தடைசெய்யவில்லை. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆரியபட்டா செயற்கைக்கோளுக்கான நிதி திட்ட அறிக்கையை கேட்டார். சரியாக மூன்று மணி நேரத்தில் அதைத் தெரிவித்தார் பேராசிரியர் ராவ் (அந்நியச் செலாவணியுடன் சேர்த்து ரூ. 3 கோடி).

இந்திரா காந்தியின் ஒப்புதலுடன் 1972, மே 10-ஆம் தேதி சோவியத் ஒன்றிய அறிவியல் கழகத்தின் தலைவர் எம். கெல்டின் மற்றும் எம்ஜிகே மேனன் ஆகியோர் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-சோவியத் ஒப்பந்தம் கையொப்பமானது. ராவ் பெங்களூரின் பீன்யா தொழிற்பேட்டையில் கல்நார் கூரையிடப்பட்ட 4 கொட்டகைகளைப் பெற்றார்.

முதலில் இந்தோ -சோவியத் செயற்கைக்கோள் திட்டம் (ஐஎஸ்எஸ்பி) என்றழைக்கப்பட்டு, பின்னர் 'இந்திய அறிவியல் செயற்கைக்கோள் திட்டம்' என மறுபெயரிடப்பட்ட இந்த பீன்யா மையம் 1972, செப்டம்பர் 11-ஆம் தேதி முறைசாரா முறையில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், கொள்முதல் ஒரு பெரும் தடையாக இருந்தது. மனம் தளராமல், ராவ் தலைமையில் டி.என். சேஷன் மற்றும் ஒய்.எஸ். ராஜன் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்பு கொள்முதல் குழுவை இஸ்ரோ அமைத்தது. அவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து, உடனடி ஆர்டர்களை வழங்கி, அதிகாரத்துவத் தடைகளைத் தவிர்த்து, உபகரணங்களை மலிவாகவும் விரைவாகவும் பெற்றனர்.

ராவ் தனது தொடர்புகள் மூலம், நாசா-விடமிருந்து கடன் மற்றும் மாற்று அடிப்படையில் செயற்கைக்கோளுக்கான சில பாகங்களையும் பெற்றார். 1974-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி பிரதமர் இந்திரா காந்தி, இஸ்ரோவின் பீன்யா கொட்டகைகளைப் பார்வையிட்டார். சவால்களையும், குறைந்த வளங்களையும் மீறி, அர்ப்பணிப்புள்ள, இரவு-பகல் பாராமல் உழைக்கும் வலுவான இந்திய விஞ்ஞானிகள் குழு 30 மாதங்களில் அந்தச் செயற்கைக்கோளை உருவாக்கியது.

புது தில்லியிலிருந்து சுமார் 3,200 கி.மீ. தொலைவில் உள்ள ரஷியாவின் கபுஸ்தின் யார் விண்வெளி ஏவுதளத்தில் கோஸ்மோஸ்-3எம் ஏவுதலுக்காக, இந்திய விஞ்ஞானிகள் ரஷியாவில் 40 நாள்கள் அயராது உழைத்ததனர். ஒவ்வொரு விவரமும் கூர்ந்து ஆராயப்பட்டிருந்தது. அந்த இளம் இந்தியக் குழு, இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை உயிர்ப்பித்தது. விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு, ஆரியபட்டா செயற்கைக்கோள் ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டது. பின்னர், சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும், அது வழங்கிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இந்த அனுபவம் இந்தியாவின் அடுத்தடுத்த விண்வெளித் திட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.

1970-களில் மிதிவண்டிகளில் ராக்கெட் பாகங்களையும், மாட்டு வண்டிகளில் செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ கொண்டுசென்றது போல், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பீன்யாவில் இருந்த ஒரு கழிப்பறை, இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவுக்கான தரவு பெறும் மையமாக மாற்றப்பட்டது என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் யு. ஆர். ராவ் ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்துள்ளார். 'ஆரியபட்டா' திட்டம் வெற்றி என அறிவிக்கப்பட்டது.

அதைவிட முக்கியமாக, அது ஒரு செய்தியை உணர்த்தியது. இந்தியா விண்வெளிக் கழகத்தில் வெறுமனே சேரவில்லை - அப்போது இந்தியா தனது சொந்த செயற்கைக்கோள்களையும், தனது சொந்த ஏவுகணைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. ஆரியபட்டா வெறும் ஒரு செயற்கைக்கோள் மட்டுமல்ல; ஒரு தேசத்தால் சாத்தியமற்றதைக் கற்பனை செய்து, அதன்பிறகு, பல கொட்டகை

களுக்குள், பாகம் பாகமாக வடிவமைத்து, உருவாக்கி, சோதித்து, சிறந்த உள்ளமைந்த அமைப்புகளுடன் செயல்படும் ஒரு செயற்கைக்கோளைக் கட்டமைக்க முடியும் என்பதற்கான சான்றாக விளங்கியது. ஆரியபட்டா, இறுதியில் 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்தது. இதன் மூலம் அது சுமார் 17 ஆண்டு

கள் சுற்றுப்பாதையில் வலம் வந்தது. 'ஆரியபட்டாவில் ஏற்பட்ட எந்தத் தோல்வியும், ஒரு தோல்வியாகக் கருதப்படவில்லை. ஆனால், அவை எதிர்கால வெற்றிக்கான படிக்கட்டுகளாக இருந்தன'. இதன் பின்னர், இந்தியா பல விண்வெளி சாதனைகளை எட்டியது. இன்சாட் தொடர் மூலம் தொலைத்தொடர்பு சேவைகள் வளர்ச்சி பெற்றன.

சந்திரயான் மூலம் சந்திரனை ஆய்வு செய்தோம். செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் மூலம் செவ்வாய்க்கு சென்றோம். இன்று நாம் பயன்படுத்தும் செயற்கைக்கோள் தொடர்பு, காலநிலை கணிப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்ற அனைத்துக்கும் அடிப்படை ஆரியபட்டா ஆகும். நிலவை நாம் 2023-இல் தொட்டுவிட்டோம் (மென்மையான தரையிறங்குதல்). விரைவில் இந்தியாவின் நான்காவது நிலவுப் பயணமான சந்திரயான்-4, நிலவில் மென்மையாகத் தரையிறங்குவதுடன் மட்டுமல்லாமல், நிலவு மாதிரிகளைச் சேகரித்து, நிலவிலிருந்து, அந்த மாதிரிகளை நமது தாய் கிரகத்துக்கு எடுத்து வர உள்ளது.

51 ஆண்டுகள் கழிந்த பின்னரும், ஆரியபட்டாவாலும், இந்தியாவின் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் முன்னோடிகளாலும் உருவாக்கப்பட்ட மரபு ஒவ்வொரு வெற்றிகரமான ஏவுதலிலும், ஒவ்வொரு புதிய செயற்கைக்கோளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு பெரும் விண்வெளி வல்லரசாக உருவெடுப்பதற்கான பயணத்தின் தொடக்கத்துக்கு இது அடித்தளமிட்டது. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான 'ஆரியபட்டா'வின் சாதனைகளை நாம் திரும்பிப் பார்க்கும்போது, இந்திய விண்வெளி ஆய்வின் முன்னோடிகள் எடுத்துவைத்த துணிச்சலான காலடிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன. காலத்தால் பின்னோக்கிச் செல்லும் அதே வேளையில், உத்வேகம் நிறைந்த எதிர்

காலத்தை நோக்கியும் நமது இளைய தலைமுறை பயணிக்க வேண்டும். சுருக்கமாகக் கூறின், இந்திய செயற்கைக்கோளான 'ஆரியபட்டா' இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் அது ஏற்படுத்திய புரட்சிகரமான தாக்கமும், விண்வெளித் தொழில்நுட்பத்தில் அது கொண்டு வந்த முன்னேற்றங்களும், எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான பாதையை அமைத்துத் தந்தன.

இந்தியா தொடர்ந்து புதிய எல்லைகளை நோக்கிப் பயணித்து வரும் வேளையில், 'ஆரியபட்டா'வால் இடப்பட்ட அடித்தளங்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றும்.

கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.