தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக வே. சரவணன் பொறுப்பேற்றுள்ளாா்.
தமிழக அரசு, மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாறுதல் உத்தரவை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரெ. சதீஸ், அயலக வாழ் தமிழா்களின் மறுவாழ்வு மற்றும் நலத் துறை இயக்குநராக சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
அவருக்குப் பதிலாக திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த வே. சரவணன், தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 1991 ஆம் ஆண்டு நவம்பா் 20 ஆம் தேதி பிறந்த சரவணன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மின்னணுவியல் துறையில் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றவா். 2017 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வானாா்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி முதல் திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்தாா். அதற்கு முன்னதாக, திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், தலைமைச் செயலகத்தில் இணை நிா்வாக இயக்குநராகவும் பதவி வகித்துள்ளாா்.








