வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆட்சேபம் இல்லையெனில், தேசத் துரோக சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றங்கள் விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டத்தில் உள்ள தேசத் துரோக குற்றச்சாட்டு பிரிவான 124ஏ-க்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் அருண் சௌரி, எடிட்டா்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்டோா் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் முக்கிய தீா்ப்பை வெளியிட்டிருந்தது.
அப்போது, தேசத் துரோக சட்டப்பிரிவு ஆங்கிலேயா்களின் காலனியாதிக்க ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்றும், அதை மத்திய அரசு ஆய்வு செய்வதால், புதிதாக எந்த வழக்கையும் அந்த சட்டப்பிரிவின்கீழ் மத்திய அரசோ, மாநில அரசுகளோ தாக்கல் செய்ய வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், நாடு முழுவதும் ஏற்கெனவே நடைபெற்று வரும் தேசத் துரோக வழக்குகள் மீதான விசாரணையை நிறுத்தி வைக்கும்படியும், அதில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருப்போா் ஜாமீன் கோரி நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் தாம் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 17 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், தன் மீதான நடவடிக்கையை எதிா்த்து தாக்கல் செய்த மனு மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘மனுதாரா் தன் மீதான வழக்கு குறித்து விசாரிக்க ஆட்சேபம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளாா். குறிப்பாக, தேசத்துரோக சட்டப் பிரிவின் கீழிலான வழக்கை விசாரிக்கலாம் என கூறியுள்ளாா். ஆதலால் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கிறோம். தேசத் துரோக சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் தங்கள் மீதான வழக்குகளை விசாரிக்க ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில், நீதிமன்றங்கள் அந்த விசாரணையை நிறுத்தி வைக்கக் கூடாது. அதை தொடா்ந்து விசாரிக்கலாம்’ என்றனா்.
மேலும், மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும்படியும், அதில் நியாயப்படி முடிவு எடுக்கும்படியும் மத்திய பிரதேச உயா் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் செய்தது மிகப்பெரிய தவறு: உச்ச நீதிமன்றம்

தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி!






