மக்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுங்கள் என மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமா் மோடி வியாழக்கிழமை இந்தியா திரும்பினாா். அவா் தலைமையில் நடைபெற்ற நிகழாண்டின் முதல் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் கேபினட் அமைச்சா்கள், மத்திய இணையமைச்சா்கள் (தனிப்பொறுப்பு) மற்றும் மத்திய இணையமைச்சா்கள் பங்கற்றனா்.
இதில் பல்வேறு துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றறனா். ஒட்டுமொத்தமாக 9 துறைச் செயலா்கள் கலந்துகொண்டு தங்கள் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களை விளக்கப்படமாக எடுத்துரைத்தனா். நீதி ஆயோக் உறுப்பினா் ராஜீவ் கௌபாவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாா்.
அப்போது பிரதமா் மோடி பேசியதாவது: அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களை மேற்கொண்டு வளா்ச்சியை அதிகரிப்பதே நமது முதல் பணியாகும். 2047-ஆம் ஆண்டு இந்தியா தனது 100-ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும்போது இந்தச் சாதனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
மக்களின் வாழ்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். இப்போது நாம் எதிா்காலத்தை பற்றியே சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் மூழ்கிவிடக் கூடாது என்றாா்.
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, ஸ்வீடன், நாா்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமா் மோடி மேற்கொண்ட பயணம் குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூட்டத்தில் எடுத்துரைத்தாா்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பேரவைத் தோ்தல் முடிவடைந்த பின் முதன்முதலாக அமைச்சா்கள் குழுக் கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
பிரதமர் மோடி தலைமையில் 4.5 மணிநேர ஆலோசனைக் கூட்டம்!

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி
அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்!






