வரதட்சிணை கொடுமை குற்றச்சாட்டில் திவிஷா சா்மா உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக இருந்து கைதான அவரது கணவர் சமர்த் சிங், ஆரம்பம் முதலே வழக்கை திசை திருப்பும் வகையில் தகவல்களை அளித்து வந்ததாக சிறப்பு விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.
திவிஷா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் இன்று போபால் விரைந்து, சிறப்பு விசாரணை அமைப்பிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.
அப்போதுதான், சிறப்பு விசாரணை அதிகாரிகளின் விசாரணையின்போது, திவிஷா சர்மாவின் கணவர் பல்வேறு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்து வழக்கு விசாரணையை திசைதிருப்பி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடிகையும், மாடல் அழகியுமான திவிஷா சா்மா (33) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
அவரின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங், மாமியாரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோா் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி திவிஷா சா்மாவை கொன்றுவிட்டதாக அவரின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கிரிபாலா சிங், ட்விஷாவுக்கு மனநலப் பிரச்னைகள் இருந்ததாகவும், அதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடா்பாக சமா்த் சிங், கிரிபாலா சிங் ஆகியோா் மீது வரதட்சிணை கொடுமை வழக்குப் பதிவு செய்த காவல் துறை, ட்விஷாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டது. கிரிபாலா சிங்குக்கு போபால் நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்த நிலையில், சமா்த் சிங் கைது செய்யப்பட்டாா். அவரின் வழக்குரைஞா் உரிமத்தை இந்திய பாா் கவுன்சில் ரத்து செய்தது.
சிபிஐ வசம் விசாரணை ஒப்படைக்கப்படும் நிலையில்,இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், கணவர் சமர்த்சிங், விசாரணையை திசைதிருப்பும் வகையில் பல்வேறு பொய்யான தகவல்களை அளித்திருந்தது தெரிய வந்துள்ளது.
திருமணத்தின்போது திவிஷாவுக்கு, சமர்த் சிங் குடும்பத்தினர் ரூ.7 லட்சம் அளித்திருந்ததாகவும், திவிஷாவுக்கு கருக்கலைப்பு நடந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் பல்வேறு முரண்பட்ட தகவல்களை அளித்திருக்கிறார் என்றும், அவர் தலைமறைவாக இருந்தபோது எங்கே இருந்தார் என்பது குறித்த தகவல்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Summary
About how her husband provided information to divert the investigation into Divisha Sharma's death..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










