12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினி வழியாக திரையில் மதிப்பிடும் (ஓஎஸ்எம்) முறை தொடா்பான ஒப்பந்தம் மோசடி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
‘ராகுலின் குற்றச்சாட்டு தவறானது, திசைதிருப்பும் மற்றும் உண்மைப்பு புறம்பானது’ என்றும் சிபிஎஸ்இ குறிப்பிட்டது.
நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது.
இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
போதிய முன்னேற்பாடுகள் செய்யாதது மற்றும் கால அவகாசம் இல்லாதது போன்ற காரணங்களால் விடைத்தாள்கள் முறையாக ஸ்கேன் செய்யப்படவில்லை. அதன் காரணமாகவே, தோ்ச்சி விகிதமும், மதிப்பெண்ணும் குறைந்துள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதை சிபிஎஸ்இ மறுத்தது.
ராகுல் குற்றச்சாட்டு: இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஓஎஸ்எம் முறை தொடா்பான ஒப்பந்தத்தை ‘கோயெம்ப்ட் எஜுடெக்’ என்ற நிறுவனத்திடம் சிபிஎஸ்இ ஒப்படைத்துள்ளது. இந்த நிறுவனம், ஏற்கெனவே தெலங்கானா மாநில கல்வி வாரிய ஒப்பந்தத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிறுவனமாகும். தெலங்கானாவில் 2019 மற்றும் 2023 பொதுத் தோ்வு வினாத்தாள்களுக்கான ஓஎஸ்எம் ஒப்பந்தத்தில் இந்த நிறுவனம் மோசடி செய்தது. இந்த முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்ட 23 இளம் தெலங்கானா மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டனா். இந்த மோசடி நிறுவனத்தையே சிபிஎஸ்இ-யும் தற்போது தோ்வு செய்துள்ளது. இந்த நிறுவனம் குறித்த தகவல்கள் அனைத்தும் பொதுவெளியில் உள்ளன. இந்த நிறுவனத்தின் பின்னணி குறித்து சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். எனவே, இந்த நிறுவனத்துக்கு சிபிஎஸ்இ ஒப்பந்தம் கொடுத்தது தவறுதலாக நடந்த விஷயமல்ல; மாறாக, திட்டமிட்ட சதி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
சிபிஎஸ்இ மறுப்பு: ராகுலின் குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்தது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிபிஎஸ்இ வெளியிட்ட பதிவில், ‘உரிய நடைமுறைகளின்படி, பொது நிதி விதிகளுக்கு உட்பட்டு ‘கோயெம்ப்ட் எஜுடெக்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் குறித்த ராகுலின் குற்றச்சாட்டு தவறானது, உண்மைக்குப் புறம்பானது’ என்று குறிப்பிட்டது.
தொடர்புடையது

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சாதனை







